கிறிஸ்துவின் திரு உடல் திரு இரத்தப்பெருவிழாவை முன்னிட்டு மல்வம் பங்கில் முன்னெடுக்கப்பட்ட நற்கருணை பேரணி ஆனி மாதம் 07ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை அருட்செல்வன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இப்பேரணி மல்வம் திருக்குடும்ப ஆலயத்தில் நற்கருணை வழிபாட்டுடன் ஆரம்பமாகியது.
நற்கருணை வழிபாட்டை அருட்தந்தை ஸ்கரன்ராஜ் அவர்கள் நெறிப்படுத்தியதுடன் இளவாலை மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை யேசுதாஸ் அவர்கள் நற்கருணை ஆசீரை வழங்கினார்.
தொடர்ந்து இப்பேரணி உடுவில் புனித செபமாலை அன்னை ஆலயம், சுன்னாகம் அந்தோனியார் ஆலயம், கந்தரோடை ரோசா மாதா ஆலயம், சங்குவேலி குழந்தை இயேசு ஆலயம் என்பவற்றினூடாக அந்திரான் புனித வேளாங்கன்னி அன்னை ஆலயத்தை சென்றடைந்து அங்கு இடம்பெற்ற நற்கருணை ஆசீர்வாதம் மற்றும் திருப்பலியுடன் நிறைவடைந்தது.
திருப்பலியை யாழ். கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவ கல்லூரி விரிவுரையாளர் அருட்தந்தை ரவிராஜ் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்ததுடன் இறுதியாசீரை பங்குத்தந்தை அருட்தந்தை அருட்செல்வன் அவர்கள் வழங்கினார்.
இப்பேரணி தரித்த இடங்களில் சிறப்பு நற்கருணை வழிபாடுகள் நடைபெற்றதுடன் சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலய முன்றலில் சுன்னாகம் பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின்ஸ் அவர்களுடன் பங்குமக்கள் இணைந்து ஆராதனையையும் முன்னெடுத்தனர்.
இவ்வழிபாடுகளை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தையர்கள் சந்திரபோஸ், லெபோன் சுதன், வின்சன் பற்றிக் ஆகியோர் நெறிப்படுத்தினர்.
இப்பவனியில் பங்குமக்கள், இந்துசமய மக்களென 750 வரையானவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

