ஆசியத் திருஅவைகள் உரையாடல், நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றின் மூலம் அமைதியை உருவாக்குபவர்களாக மாறவேண்டுமென ஆசிய ஆயர் பேரவைக்கான திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் சிறப்புத் தூதர் கர்தினால் ஆஸ்வால்ட் கிரேசியாஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

ஆடி மாதம் 21ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை ஆசிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் 12ஆவது நிறைவிறுதிப் பேரவையை உத்தியோகபூர்வமாகத் ஆரம்பித்துவைத்து தொடக்க திருப்பலிக்குத் தலைமை தாங்கிய கர்தினால் கிரேசியாஸ் அவர்கள், ஒன்றிணைந்தப் பயணம் உலகிற்கு திருஅவை அளிக்கும் மிகச்சிறந்த பரிசென சுட்டிக்காட்டி மக்களை ஒன்றிணைக்கவும் அமைதிக்கான பாலங்களை உருவாக்கவும் திருஅவை அழைக்கப்பட்டுள்ளதென எடுத்துரைத்துள்ளார்.

ஆசிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பு என்பது வெறும் நிறுவன ரீதியான சந்திப்பு மட்டுமல்ல இது ஆசியத் திருஅவைகள் காலத்தின் அறிகுறிகளை உணர்ந்து நற்செய்தியை அறிவிக்கும் தங்கள் உறுதிப்பாட்டைப் புதுப்பித்துக் கொள்வதற்கான ஒரு வாய்ப்பென குறிப்பிட்ட கர்தினால் ஆஸ்வால்ட் கிரேசியாஸ் போர், வன்முறை மற்றும் கோவிட்-19 பெருந்தொற்றின் நீடித்த தாக்கம் ஆகியவை மனுக்குலம் எதிர்கொள்ளும் முக்கிய சவால்களென தெரிவித்துள்ளார்.

செவிமடுத்தல், பங்கேற்பு, வெளிப்படைத்தன்மை மற்றும் பகிரப்பட்ட பொறுப்பு ஆகிய ஒருங்கிணைந்த மதிப்புகள் நல்லாட்சியை வலுப்படுத்தவும் ஆசியா முழுவதும் அமைதியை மேம்படுத்தவும் உதவுமென எடுத்துரைத்த கர்தினால் கிரேசியாஸ் அவர்கள், கண்டம் முழுவதும் அமைதி மற்றும் சகோதரத்துவத்தைத் தொடர்ந்து உருவாக்க பிரதிநிதிகளை ஊக்குவித்தார்.

ஆடி மாதம் 20ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெற்றுவரும் இப்பேரவையில் ஆசியா முழுவதிலுமிருந்து 100ற்கும் மேற்பட்ட கர்தினால்கள், ஆயர்கள், அருட்தந்தையர்கள், துறவிகள் மற்றும் பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளதுடன் இலங்கை நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தி திருகோணமலை மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை நோயல் இம்மானுவேல், காலி மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை றேமன்ட் விக்ரமசிங்க, சிலாபம் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை விமல் ஸ்ரீ ஜெயசூர்ய, கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயர் பேரருட்தந்தை அந்தோனி ஜெயக்கொடி ஆகியோர் பங்குபற்றியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin