யாழ். மறைமாவட்ட குரு அருட்தந்தை அன்ரனி பெர்னாண்டோ பெனற் அவர்கள் புரட்டாதி மாதம் 06ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

1989ஆம் ஆண்டு குருவாக திருநிலைப்படுத்தப்பட்ட இவர் மயிலிட்டி, இளவாலை, பரந்தன் பங்குகளின் உதவி பங்குத்தந்தையாகவும் சண்டிலிப்பாய் பங்கின் பதில் பங்குத்தந்தையாகவும் கரவெட்டி, மானிப்பாய், கிளிநொச்சி, பருத்தித்துறை, பரந்தன் பங்குகளின் பங்குத்தந்தையாகவும் ஜேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியக இயக்குநராகவும் மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய இயக்குநராகவும் கிளிநொச்சி, பருத்தித்துறை மறைக்கோட்டங்களின் முதல்வராகவும் பணியாற்றியுள்ளதுடன் வவுனியா செட்டிக்குளம் இடம்பெயர்ந்தோர் முகாமிலும் சேவையாற்றியுள்ளார்.

யுத்தம், இடம்பெயர்வு மற்றும் துயரத்தின் மத்தியில் மக்களோடு பயணித்த அருட்தந்தை அவர்கள் வன்னிப் போர்க்காலத்தில் மக்களுக்கு ஆறுதலாகவும், குருக்களுக்கு துணையாகவும் பணியாற்றினார். மடு அன்னையின் திருச்சொரூபத்தை வன்னியிலிருந்து மன்னாருக்கு பாதுகாப்பாக எடுத்துச் செல்வதிலும் முக்கிய பங்காற்றினார்.

மக்களோடு அன்புடனும் எளிமையுடனும் பயணித்த நல்ல ஆயனாக விளங்கிய அவரது வாழ்வும் பணியும், யாழ். மறைமாவட்டத்தின் வரலாற்றில் அழியாத நினைவாக நிலைத்திருக்கும்.

 

By admin