நாட்டின் நீதி, அமைதி மற்றும் நல்லிணக்கத்தைப் பாதிக்கும் முக்கிய விடயங்கள் தொடர்பில் இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

ஆவணி மாதம் 18ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை நடைபெற்ற முழுமையான அமர்வைத் தொடர்ந்து வெளியிடப்பட்டுள்ள இவ்வறிக்கையில், மனித உரிமைகள், கடந்தகால சம்பவங்கள், சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் சமூக நீதி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து ஆயர்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் கண்டறியப்பட்டுள்ள மனிதப் புதைகுழிகள் தொடர்பில் நடுநிலையானதும் வெளிப்படையானதுமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ள ஆயர் பேரவை, குறிப்பாக செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் விரைவாக நிறைவுசெய்யப்பட்டு, உண்மை வெளிக்கொணரப்படுவதுடன் பொறுப்புக்கூறலும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், 30 வருட உள்நாட்டுப் போரின்போதும் அதற்கு முன்னரும் இடம்பெற்ற பயங்கரவாதச் சம்பவங்கள் மற்றும் படுகொலைகள் தொடர்பில் உண்மையை கண்டறிந்து உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் ஆயர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனிடையே, மன்னாரில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களைத் தொடர்ந்து இத்தகைய திட்டங்களை மேலும் விரிவுபடுத்தக் கூடாது என அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டுள்ள ஆயர்கள், எந்தவொரு அபிவிருத்தித் திட்டத்திற்கும் முன்னர் உள்ளூர் மக்களுடன் கலந்துரையாடி, மீனவர்களின் வாழ்வாதாரமும் சுற்றாடலும் பாதுகாக்கப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளனர்.

அத்துடன், எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் பேரழிவுக்கான நட்டஈட்டை பெற்றுக்கொள்வதில் நீதிமன்றத் தீர்ப்பை அரசாங்கம் முறையாக நடைமுறைப்படுத்துவதடன், முத்துராஜவேல சதுப்பு நிலத்தைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் ஆயர் பேரவை கேட்டுக்கொண்டுள்ளது.

By admin