யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் ஆடி மாதம் 22ஆம் கடந்த புதன்கிழமை செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியை பார்வையிட்டதோடு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் மற்றும் சிவில் அமைப்புக்கள் இணைந்து செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழிக்கு முன்பாக முன்னெடுத்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களையும் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினர்.
இதன்போது பாதிக்கப்பட்டவர்கள் தூதுவர்களுக்கு தமது கோரிக்கைகளை எடுத்துரைத்ததுடன் கோரிக்கை மனுவையும் கையளித்தனர்.
ஐரோப்பிய ஒன்றியத தூதுவர் கார்மென் மொரேனோ, ஜேர்மனி தூதுவர் கலாநிதி பெலிக்ஸ் நியுமன், பிரான்ஸ் தூதுவர் ரெமி லம்பேர்ட், இத்தாலித் தூதுவர் டாமியானோ பிராங்கோவிக், நெதர்லாந்து தூதுவர் விபே டி போயர், ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளான பிரதித் தூதுக்குழுத் தலைவர் கலியா அகிஸேவா, ஒத்துழைப்புப் பிரிவுத் தலைவர் கலாநிதி ஜோஹன் ஹெஸ் ஆகியோர் செம்மணி மனித குதைகுழியை பார்வையிட்டனர்.
1999ஆம் ஆண்டு செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டபோது இதன் வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்வதாற்காக சர்வதேச பிரதிநிதிகள் இங்கு அழைக்கப்பட்டிருந்தநிலையில் அப்போதைய ஐரோப்பிய ஒன்றியம், சர்வதேச மன்னிப்புச் சபை மற்றும் மனித உரிமைகளுக்கான சர்வதேச நிபுணர்குழு இங்கு வருகைதந்து நேரடியாக இப்பணிகளை கண்காணித்தனர்
தொடர்ந்து 2025ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் திரு. வோல்கர் டர்க் அவர்கள் இப்பகுதியை தரிசித்ததுடன் தற்போது இக்குழுவினர் நேரடியாக இப்பகுதிக்கு வருகைதந்து அகழ்வுப்பணிகளை பார்வையிட்டு மக்களுடன் உரையாடியுள்ளனர்.
இதற்கிடையில், செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 42ஆவது நாளான கடந்த வெள்ளிக்கிழமை, புதிதாக 01 என்பு கூடும் 01 என்புகூட்டு குவியலும் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அதேவேளை ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 15 என்புக்கூடுகளும் 03 என்புக் கூட்டு குவியல்களும் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. மேலும் 437ஆவது என்புக்கூட்டின் வலது பக்க விலா எலும்புடன் தொடுகையுற்றவாறு இரும்பு தகடு அடையாளம் காணப்பட்டதுடன், சில ஆணிகளும் சான்று பொருட்களாக மீட்கப்பட்டுள்ளன.
அதன் அடிப்படையில் செம்மணி மனித புதைகுழியில் முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்களாக இதுவரை 96 நாட்கள் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளில் 480 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டு அவற்றில் 479 என்பு கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
அதேவேளை செம்மணி அகழ்வு பணிகள் ஆடி மாதம் 24ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமையுடன் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, எதிர்வரும் ஆவணி மாதம் 04ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

