புதிதாக அமைக்கப்பட்டுவந்த கிளிநொச்சி பங்கின் 155ஆம் கட்டை புனித அந்தோனியார் ஆலய திறப்புவிழா ஆனி மாதம் 06ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை ஜெயக்குமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் புனிதரின் திருவிழாவிற்கான ஆயத்த நாளின் முதல் நாள் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் கலந்து ஆலயத்தை ஆசீர்வதித்து திறந்துவைத்து திருப்பலியை தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், இறைமக்களென பலரும் கலந்துகொண்டனர்.
1975ஆம் ஆண்டு அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை எட்மண்ட் மைக்கல் அவர்களால் கொட்டில் ஆலயமாக அமைக்கப்பட்ட இவ்வாலயம் 1986ஆம் ஆண்டு அருட்தந்தை பயஸ் அவர்களின் பணிக்காலத்தில் அறுகோண வடிவில் கட்டப்பட்டது.
தொடர்ந்து 1996ஆம் ஆண்டு விமானத்தாக்குதலால் சேதமடைந்த இவ்வாலயம் 2000ஆம் ஆண்டு அப்போதைய பங்குத்தந்தை அருட்தந்தை தேவசகாயம் அவர்களின் பணிக்காலத்தில் நீள்சதுர வடிவில் மீண்டும் அமைக்கப்பட்டது.
தொடர்ந்து முள்ளிவாய்க்கால் இறுதியுத்தத்தின் பின் மக்கள் மீள்குடியேறிய நிலையில் 2010ஆம் ஆண்டு அருட்தந்தை ஜேசுதாஸ் அவர்களின் பணிக்காலத்தில் தற்போதைய புதிய எண்கோணவடிவ ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டு அருட்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் அவர்கள் பணிக்காலத்தில் கட்டுமானப்பணிகள் தொடரப்பட்டு அருட்தந்தை ஜெயக்குமார் அவர்களின் பணிக்காலத்தில் கட்டுமானப்பணிகள் நிறைவடைந்து இவ்வாலயம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
இவ்வாலய கட்டுமானப்பணிகளுக்கான நிதியுதவியை பங்குமக்கள், அயற்பங்கு மக்கள் மற்றும் இந்துசமய மக்கள் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

