தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு தொடர்பாக அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் வெளியிட்ட கருத்துகளுக்கு ஆதரவு தெரிவித்து, மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மார்க்கஸ் காணொளி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
இவ்வறிக்கையில், தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற இன அழிப்பு தொடர்பாக அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் தனது வாழ்வியல் அனுபவங்களின் அடிப்படையில் கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்ததாகக் குறிப்பிட்டுள்ள அருட்தந்தை மார்க்கஸ், அந்தக் கருத்துக்களை மன்னார் மாவட்ட மக்கள் மதிப்புடனும் பொறுப்புணர்வுடனும் ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், கொழும்பு மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருட்தந்தை ஜீட் கிறிஸாந்த வெளியிட்ட எதிர்ப்புக் கருத்துக்கள் மனித உரிமைகள் மற்றும் கருத்துச் சுதந்திரம் தொடர்பான தீவிரமான கேள்விகளை எழுப்புவதாகவும், அவை கத்தோலிக்க சமூகத்தினரிடையிலும் இலங்கை மக்களிடையிலும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், கடந்த பல தசாப்தங்களாக வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட வன்முறைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான பல்வேறு உண்மைகள் சர்வதேச மட்டத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், அருட்தந்தை ஜீவந்த பீரிஸின் குரலை ஒடுக்குவதற்கான எந்தவொரு முயற்சியையும் தாம் உறுதியாக எதிர்ப்பதாகத் தெரிவித்துள்ள அருட்தந்தை மார்க்கஸ் அவர்கள், மன்னார் மாவட்ட மக்களும் கத்தோலிக்க சமூகத்தினரும் தொடர்ந்தும் அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் உடன் ஒன்றுபட்டு நிற்பதுடன் அவர் முன்வைத்துள்ள கருத்துகளுக்கு தங்களது ஆதரவை வழங்கத் தயாராக இருப்பதாகவும் வலியுறுத்தியுள்ளார்.
