மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ அவர்களின் 38வது ஆண்டு நினைவுநாள் நிகழ்வு ஆனி மாதம் 06ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.

கரித்தாஸ் எகெட் நிறுவன பல்சமய ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நிறுவன இயக்குநர் அருட்தந்தை அன்ரனி ஜெயராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ அவர்களின் உருவப்படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு ஈகைச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து ஆலயத்திலுள்ள அருட்தந்தையின் கல்லறையில் மலரஞ்சலி செலுத்தப்பட்டு அகவணக்கமும் நினைவுரைகளும் நடைபெற்றன.

இந்நிகழ்வில் பல்சமய தலைவர்கள், ஒன்றிய அங்கத்தவர்கள், அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்களென பலரும் கலந்து அருட்தந்தைக்கு அஞ்சலி செலுத்தினர்.

1985ஆம் ஆண்டு காலப்பகுதியில் மட்டக்களப்பு மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவராக செயற்பட்டுவந்த அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ அவர்கள் பலத்த சவால்கள், அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தளராது பணியாற்றி கைதுகள் செய்யப்பட்ட அப்பாவிகளுக்காக தனது உயிரையும் துச்சமென மதித்து இராணுவ முகாம்களுக்குச் சென்று அவர்களின் விடுதலைக்காக பரிந்து பேசியவர்.

அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ அவர்கள் 1988ஆம் ஆண்டு ஜீன் மாதம் 06ஆம் திகதி தனது பங்குப்பணிமனையில் இருந்தவேளை இந்திய இராணுவத்துடன் இணைந்து செயற்பட்ட அடையாளம் தெரியாத ஆயுதக்குழு ஒன்றினால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

 

 

By admin