இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட கல்லூரி தினம் அதிபர் அருட்தந்தை மைக் மயூரன் அவர்களின் தலைமையில் ஆடி மாதம் 13ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வில் இளவாலை புனித அன்னாள் ஆலயத்தில் திருப்பலியும் நிறைவில் கல்லூரி மைதானத்தை நோக்கிய புனிதரின் திருச்சொருப பவனியும் ஆசீரும் தொடர்ந்து கல்லூரிதின நிகழ்வுகளும் இடம்பெற்றன.
திருநாள் திருப்பலியை ஆயர் எமிலியானுஸ்பிள்ளை ஓய்வுநிலை குருக்கள் இல்ல பொறுப்பாளரும் கல்லூரியின் பழைய மாணவருமான அருட்தந்தை ஜோசப் ஜெயசீலன் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுக்க திருச்சொருப ஆசீரை மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெபரட்ணம் அவர்களும் வழங்கினார்கள்.
கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற கல்லூரிதின நிகழ்வில் இவ்வருடம் குருத்துவ வாழ்வில் 25ஆவது யூபிலியை நினைவுகூரும் அருட்தந்தையர்கள் ஜோசப் ஜெயசீலன், எயின்சிலி றொசான், அலெக்ஸிஸ் அருட்செல்வன் மற்றும் தமது 50ஆவது பிறந்தநாளை நினைவுகூரும் அருட்தந்தையர்கள் அன்ரன் ஸ்ரிபன் மற்றும் தயாகரன் ஆகியோருக்கான கௌரவிப்பு, ஹென்றி நாதம் மலரின் ஏழாவது இதழ் வெளியீடு, 2025ஆம் ஆண்டு கா.பொ.த சாதாரண தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற கல்லூரி மாணவர்களுக்கான கௌரவிப்பு, கல்லூரி தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட மரதன் ஓட்டப்போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசளிப்பு என்பன இடம்பெற்றன.
யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெபரட்ணம் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் அருட்சகோதரிகள், மாணவர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்களென பலரும் கலந்து சிறப்பித்தனர்.
2025ஆம் ஆண்டு கா.பொ.த சாதாரண தர பரீட்சையில் இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியை சேர்ந்த இரண்டு மாணவர்கள் 9A சித்தியையும் இரண்டு மாணவர்கள் 7A சித்தியையும் இரண்டு மாணவர்கள் 5A சித்தியையும் மூன்று மாணவர்கள் 4A சித்தியையும் மூன்று மாணவர்கள் 3A சித்தியையும் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

