யாழ்ப்பாணம் குருநகர் புனித யாகப்பர் ஆலய முன்றலில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த கொடிக்கம்ப கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் அதனை அசீர்வதித்து புனிதரின் கொடியேற்றும் நிகழ்வு, திருவிழா ஆயத்த வழிபாடுகளின் ஆரம்ப நாளாகிய ஆடி மாதம் 16ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை மாலை அங்கு நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை றெக்ஸ் சவுந்திரா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெபரட்ணம் அவர்கள் கலந்து அழகிய தோற்றத்துடன் கம்பீரமாக காட்சிதரும் புதிய கொடிக்கம்பத்தை ஆசீர்வதித்து புனிதரின் கொடியை ஏற்றிவைத்தார்.
இக்கொடிக்கம்ப அமைப்புக்கான திட்டமிடல் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை ஜஸ்ரின் யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் அனுமதியுடன் மேற்கொள்ளப்பட்டு முன்னாள் பங்குத்தந்தை அருட்தந்தை அருளானந்தம் யாவிஸ் அவர்களால் இவ்வருடம் மாசி மாதம் 2ஆம் திகதி அத்திவாரம் அமைக்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்டது.
உலோகத்தால் அமைக்கப்பட்டு அழகிய தோற்றத்துடன் உயர்ந்துநிற்கும் இக்கொடிக்கம்பம் இந்தியா நாட்டிலிருந்து எடுத்துவரப்பட்டுள்ளதுடன் இதற்கான முழுமையான நிதி அனுசரணையை குருநகர் பங்கைச் சேர்ந்தவரும் தற்போது பிரான்ஸ் நாட்டில் பணியாற்றுபவருமான அருட்தந்தை கில்லறி வெல்லம் அவர்களின் சகோதரர் இலண்டனில் வசிக்கும் திரு. கிரகோரி கேர்பேட் வெல்லம் தனம் அவர்கள் வழங்கியிருந்தார்.

