கிறிஸ்துவின் திருஉடல் திரு இரத்த பெருவிழாவை முன்னிட்டு முல்லைத்தீவு மறைக்கோட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட நற்கருணை பேரணி ஆனி மாதம் 07ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை இராஜசிங்கம் மற்றும் சிலாவத்தை பங்குத்தந்தை அருட்தந்தை எட்வின் நரேஸ் ஆகியோரின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இப்பவனி முல்லைத்தீவு புனித இராயப்பர் ஆலயத்தில் ஆரம்பமாகி முல்லைச் சந்தி, முல்லைத்தீவு புனித குழந்தை இயேசு ஆலயம், சிலாவத்தை புனித அந்தோனியார் ஆலயம், சிலாவத்தை சந்தி என்பவற்றின் ஊடாக சிலாவத்தை புனித அன்னம்மாள் ஆலயத்தை சென்றடைந்தது.
இப்பேரணி தரித்த இடங்களில் சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றதுடன் வழிபாடுகளை தர்மபுரம் பங்குத்தந்தை அருட்தந்தை றேமன்ட் றெனால்ட், முல்லைத்தீவு றோ.க வித்தியாலய அதிபர் அருட்தந்தை றொபின்சன் ஜோசப், அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தையர்கள் விஜேந்திரன், விமல் ஆகியோர் நெறிப்படுத்தினர்.
இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், முல்லைத்தீவு மறைக்கோட்ட இறைமக்களென பலரும் கலந்துகொண்டனர்.

