இளையோர்களின் படைப்பாற்றல், சமூகப் பொறுப்புணர்வு மற்றும் திரைப்படத் திறமைகளை ஊக்குவிக்கும் நோக்கில், யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடகமையத்தினால் குறும்படப் போட்டி நடாத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
“மகத்தான மனிதநேயம் – திரையில் ஒரு கதை” எனும் கருப்பொருளில் நடைபெறும் இப்போட்டியில் தனிநபராகவோ குழுவாகவோ பங்கேற்கலாம்.
3 முதல் 10 நிமிடங்களுக்கு உட்பட்ட, போட்டியாளர்களின் சொந்தப் படைப்பாகவும் தமிழ் மொழியிலும் குறும்படங்கள் தயாரிக்கப்பட வேண்டும்.
பிறரின் காப்புரிமை உள்ளடக்கங்களை அனுமதியின்றிப் பயன்படுத்துவதும், வெறுப்புணர்வு, ஆபாசம், வன்முறை மற்றும் சட்டவிரோத செயல்களை ஊக்குவிக்கும் உள்ளடக்கங்களும் தவிர்க்கப்படவேண்டும்.
செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட காட்சிகள் பயன்படுத்தப்பட்டால், அது குறிப்பிடப்பட வேண்டும்.
போட்டிக்கான விண்ணப்பங்களை ஆவணி மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் உறுதிப்படுத்தி, குறும்படங்களை ஐப்பசி 20ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும்.
கதை, திரைக்கதை, இயக்கம், நடிப்பு, ஒளிப்பதிவு, தொகுப்பு மற்றும் ஒலிப்படைப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் குறும்படங்கள் மதிப்பீடு செய்யப்பட்டு, சிறந்த இயக்குநர், திரைக்கதை, ஒளிப்பதிவு, நடிகர், நடிகை உள்ளிட்ட விருதுகள் வழங்கப்படவுள்ளன.
தெரிவுசெய்யப்படும் குறும்படங்கள் ஊடகமையத்தின் சமூக ஊடகத் யுரியூப் தளங்களில் வெளியிடப்பட்டு, மக்கள் விருப்பப் பரிசும் வழங்கப்படும்.
மேலதிக தகவல்களுக்கு 074 162 6719, 077 025 2184 ஆகிய இலக்கங்களுடன் தொடர்புகொள்ளலாம்.

