முல்லைத்தீவில் அமைந்துள்ள தமிழினப் படுகொலை நினைவிடமான முள்ளிவாய்க்கால் முற்றத்திற்குச் செல்லும் பாதையைச் சுட்டிக்காட்டும் வகையில் பரந்தன்–முல்லைத்தீவு வீதியில் அமைக்கப்பட்டிருந்த வழிகாட்டிப் பலகை, கடந்த செப்டெம்பர் 14ஆம் திகதி வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் அகற்றப்பட்டு இடித்தழிக்கப்பட்டுள்ளது.
தமிழினப் படுகொலையை நினைவுகூருவதற்கும், அதனுடன் தொடர்புடைய வரலாற்று நிகழ்வுகளை நினைவில் நிலைநிறுத்துவதற்கும் மக்களுக்கு உள்ள உரிமையை இத்தகைய நடவடிக்கைகள் பாதிப்பதாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, பரந்தன் – முல்லைத்தீவு வீதியின் பல பகுதிகளில் இராணுவ முகாம்களுக்கான பெயர்ப்பலகைகள் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புகள் காணப்படும் நிலையில், முள்ளிவாய்க்கால் நினைவிடத்திற்கான வழிகாட்டிப் பலகை மாத்திரம் அகற்றப்பட்டமை கேள்விகளை எழுப்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த ஜூன் 11ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் இடம்பெற்ற இது தொடர்பான வழக்கின் கட்டளையை அடிப்படையாகக் கொண்டு இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முள்ளிவாய்க்கால் நினைவிடத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் தமிழ் மக்களின் வரலாற்று நினைவுகளைப் பாதுகாப்பதற்கும், நினைவுகூரும் உரிமையை உறுதிப்படுத்துவதற்கும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

