செம்மணி மனிதப் புதைகுழியின் பின்னணி, மனித உரிமை மீறல்கள், வலிந்து காணாமலாக்கப்பட்டோர் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நிலைமைகள் தொடர்பான தகவல்கள், ஆவணங்களை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க யாழ். மறைமாவட்ட அருட்தந்தையும், கனடாவின் ரொரன்ரோ மறைமாவட்டத்தில் பணியாற்றுபவருமான அருட்தந்தை அல்போன்சஸ் இருதயநாயகம் பேர்னாட் அவர்கள் முன்வந்துள்ளார்.

செம்மணி மனிதப் புதைகுழி வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல் அமர்வு நவம்பர் மாதம் 19ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் எஸ். லெனின்குமார் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது, அருட்தந்தை பேர்னாட் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி மரியதாஸ் யூட் டினேஸ் அவர்கள், செம்மணி தொடர்பான தகவல்களை வழங்குவதற்கு தனது கட்சிக்காரர் தயாராக இருப்பதாகவும், அவரின் சத்தியக்கூற்றை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

1992 ஆம் ஆண்டு முதல் 2002 ஆம் ஆண்டு வரை யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியின் அதிபராகவும், யாழ். மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழுவின் தலைவராகவும் பணியாற்றிய அருட்தந்தை பேர்னாட் அவர்கள் உள்நாட்டுப் போர் காலத்தில் மனித உரிமை மீறல்கள், வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான முறைப்பாடுகள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நலன்களுக்காகப் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார்.

1996ஆம் ஆண்டு செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான விடயங்களிலும், அகழ்வுப் பணிகளிலும் நேரடியாகப் பங்குபற்றியதாகத் தனது சத்தியக்கூற்றில் குறிப்பிட்டுள்ள அவர், பாதிக்கப்பட்ட குடும்பங்கள் சார்பில் நீதிமன்ற நடவடிக்கைகளிலும் அக்காலப்பகுதியில் ஈடுபட்டிருந்ததாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், காணாமலாக்கப்பட்டோர் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, அரச நிறுவனங்கள், சர்வதேச அமைப்புகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் தொடர்புடைய நிறுவனங்களுக்கு கடிதங்கள், முறைப்பாடுகள், விண்ணப்பங்கள் மற்றும் ஆவணங்களைச் சமர்ப்பித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தன்னிடமுள்ள ஆவணக் காப்பகப் பதிவுகள் மற்றும் நேரடி அனுபவங்கள் தற்போதைய நீதிமன்ற விசாரணைக்கு உதவியாக அமையும் என நம்பிக்கை தெரிவித்துள்ள அருட்தந்தை பேர்னாட் அவர்கள், சட்டபூர்வமான அனைத்து உதவிகளையும் வழங்கத் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, கிருஸாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் மரணதண்டனை அனுபவித்து வரும் சோமரத்ன ராஜபக்ஸவிடம் பெறப்பட்ட வாக்குமூலம் தொடர்பிலும் நீதவான் விசாரணை மேற்கொண்டார்.

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகள், இறந்தவர்களுக்கான நீதியை நிலைநாட்டவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உண்மையைக் கண்டறிந்து நீதியைப் பெற்றுக்கொடுக்கவும், மனித உரிமைகள் மற்றும் மனித மாண்பைப் பாதுகாக்கவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக அமைந்துள்ளன.

By admin