செம்மணி உள்ளிட்ட மனிதப் புதைகுழிகள் தொடர்பில் சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி, தமிழ்த் தேசியப் பேரவையின் அழைப்பின் பேரில் ஈழத்தமிழ் குடிசார் அமைப்புகளும் பொதுமக்களும் ஒன்றுகூடி பிரகடனம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் நல்லூர் கிட்டு பூங்காவில் கடந்த 13ஆம் திகதி இடம்பெற்ற இந்த ஒன்றுகூடலில், செம்மணி உள்ளிட்ட மனிதப் புதைகுழிகள் தொடர்பில் சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.
செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் சுமார் 600 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், அவை தொடர்பான அகழ்வாராய்ச்சிகளும் தடயவியல் பகுப்பாய்வுகளும் சர்வதேச நிபுணர்களின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், பெறப்படும் அனைத்து ஆதாரங்களும் முறையாகப் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் பிரகடனத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், இவ்விடயம் தொடர்பான விசாரணைகள் ஐக்கிய நாடுகள் சபையின் முழுமையான பொறுப்பின் கீழ் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.
தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற சர்வதேச குற்றங்கள் தொடர்பில் சுயாதீனமானதும் பாரபட்சமற்றதுமான சர்வதேச விசாரணைப் பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும் எனவும் பிரகடனத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனுடன், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நிலை தொடர்பில் சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்றை ஏற்படுத்துதல், நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்தல் மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.
மேலும், வடக்கு மற்றும் கிழக்கில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதிக்கும் இராணுவமயமாக்கலை அகற்றுதல், தமிழர்களின் வரலாறு, பண்பாடு மற்றும் மரபுரிமைகளைப் பாதுகாத்தல், எதிர்காலத்தில் தமிழினப் படுகொலைகள் இடம்பெறாத வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், கட்டமைப்புசார் இன அழிப்பு நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்துதல் மற்றும் நிலையான நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல் ஆகியவற்றையும் பிரகடனம் வலியுறுத்தியுள்ளது.

