மானிப்பாய் புனித அன்னாள் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை பரமதாஸ் பத்திநாதன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆடி மாதம் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
17ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 25ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
திருவிழா திருப்பலியை யாழ். கொழும்புத்துறை புனித சவேரியார் உயர் குருத்துவக் கல்லூரி விரிவுரையாளர் அருட்தந்தை ரவிராஜ் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை குளோட் மரீனோ அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.
திருவிழா திருப்பலி நிறைவில் புனிதரின் திருச்சொருப பவனியும் ஆசீர்வாதமும் நடைபெற்றன.
அத்துடன் திருவிழாவை சிறப்பித்து திருவிழா அன்று மாலை கலைமாலைப்பொழுது நிகழ்வும் இடம்பெற்றது.
அருணோதய மன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கலைநிகழ்வுகளும் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மரதன் ஓட்ட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பதக்கங்களும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றன.
கலை நிகழ்வில் பாடல், நடனம் மற்றும் பேச்சு என்பவற்றுடன் சிறப்பு நிகழ்வாக “பழி சுமந்த செங்கோல்’ தென்மோடி நாட்டுக்கூத்தும் மேடையேற்றப்பட்டது.
இந்நிகழ்வில் யாழ். கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவக் கல்லூரி விரிவுரையாளர் அருட்தந்தை ரவிராஜ் அவர்கள் பிரதம விருந்தினராகவும் தர்மபுரம் பங்குத்தந்தை அருட்தந்தை றேமன்ட் றெனால்ட் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் மானிப்பாய் சென். ஆன்ஸ் றோ.க.த.க பாடசாலை அதிபர் அருட்சகோதரி நீற்றா அந்தோனிப்பிள்ளை அவர்கள் கௌரவ விருந்தினராகவும் கலந்துகொண்டனர்.

