பூநகரி பங்கின் பள்ளிக்குடா புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை நிலான் யூலியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆனி மாதம் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
19ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 27ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
திருவிழா திருப்பலியை யாழ். கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவ கல்லூரி விரிவுரையாளர் அருட்தந்தை ரவிராஜ் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை வலைப்பாடு பங்குத்தந்தை அருட்தந்தை ஹென்றி எரோனியஸ் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.
ஆயத்தநாள் மறையுரைகளை யாழ். மறைமாவட்ட அன்பிய ஆணைக்குழு இயக்குனர் கிளறேசியன் சபை அருட்தந்தை றொனால்ட் சுஜீவன் அவர்கள் வழங்கியதுடன் வழிபாடுகள் நிறைவில் அன்பிய பயிற்சி சிறப்பு நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இந்நிகழ்வுகளில் அன்பிய மீள் உருவாக்கம், ஏழு படிமுறை நற்செய்தி பகிர்வு, கலந்துரையாடல்கள், குழுச்செயற்பாடுகள், அன்பிய பகிர்வு, என்பவை நடைபெற்றதுடன் நான்காம் நாள் பங்குமக்களால் அன்றைய வாசகங்கள் நாடகமாக நடித்துக்காட்டப்பட்டன.
ஏழாம் நாள் திருமண பந்தத்தில் இணைந்து 25 வருடங்களை பூர்த்திசெய்த 10 தம்பதியினருக்கான கௌரவிப்பு இடம்பெற்றதுடன் இந்நிகழ்வில் யாழ். அகவொளி குடும்பநல நிலைய இயக்குனர் அருட்தந்தை மனுவேற்பிள்ளை டேவிட் அவர்களும் கலந்து சிறப்பித்தார்.
அத்துடன் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பூநகரி பங்கின் தெளிகரை குழந்தை இயேசு ஆலயம் மற்றும் தம்பிராய் கிறிஸ்து அரசர் ஆலயங்களிலும் அன்பிய சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்றன.
பங்குத்தந்தையும் கிளிநொச்சி மறைக்கோட்ட அன்பிய இணைப்பாளருமான அருட்தந்தை நிலான் யூலியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அருட்தந்தை றொனால்ட் சுஜீவன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திருப்பலியும் தொடர்ந்து அன்பிய மீள் உருவாக்கம், ஏழு படிமுறை நற்செய்தி பகிர்வு என்பன இடம்பெற்றன.
இந்நிகழ்வுகளில் பங்குமக்கள் ஆர்வத்துடன் பங்குபற்றினர்.

