மன்னார் மறைமாவட்டம் மருதமடு அன்னை திருத்தல ஆடிமாத திருவிழா திருத்தல பரிபாலகர் அருட்தந்தை பெப்பி சோசை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆடி மாதம் 02ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆனி மாதம் 23ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 01ஆம் திகதி புதன்கிழமை நற்கருணை வழிபாடு இடம்பெற்றது.
திருநாள் திருப்பலி தமிழ், சிங்களம், இலத்தீன் மொழிகளில் நடைபெற்றதுடன் திருப்பலியை மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
திருப்பலி நிறைவில் அன்னையின் திருச்சொருப பவனியும் ஆசீர்வாதமும் இடம்பெற்றதுடன் இத்திருப்பலியில் அனுராதபுர மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை நிஸாந்த சாகர ஜெயமான்ன, மன்னார் மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னாண்டோ, மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை தமிழ்நேசன், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், அருட்சகோதரர்கள், அரச அதிகாரிகள், திணைக்கள தலைவர்கள், இறைமக்களென ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமானோர் கலந்து அன்னையின் ஆசீரை பெற்றுச்சென்றனர்.

