கொழும்பு கோட்டை புதையிரத நிலையம் முன்பாக யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழிக்கு நீதிகோரி முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் ஆடி மாதம் 30ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது.
அருட்தந்தையர்கள் ஜீவந்த பீரிஸ், சத்யவேல், மற்றும் செறாட் ஆகியோரின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இப்போராட்டத்தில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரி, சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளென 50ற்கும் அதிகமானவர்கள் பங்குபற்றியிருந்தனர்.
இப்போராட்டத்தின் போது ஊடகத்திற்கு கருத்து தெரிவித்த அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் அவர்கள் செம்மணியில் வெளிப்பட்ட பாரிய மனிதப் புதைகுழியை மூடிமறைக்க முடியாதென குறிப்பிட்டு இதற்கான விரிவான விசாரணை சர்வதேச கண்காணிப்பின் கீழ் நடத்தப்பட்டு, புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதைக் கண்டறிந்து நீதி வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தி பலவந்தமாகக் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் நீதி கிடைக்கும் வரை, வடக்கு மற்றும் தெற்கைச் சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து தொடர்ந்து குரல் கொடுப்பார்கள் எனவும் தெரிவித்தார்.

