மட்டக்களப்பு மறைமாவட்டம் ஆயித்தியமலை புனித சதாசகாய அன்னை திருத்தல வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை வின்சென்ட் ஜெரிஸ்டன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் புரட்டாதி மாதம் 06ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஆவணி மாதம் 28ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 05ஆம் திகதி சனிக்கிழமை புளியந்தீவு புனித மரியாள் பேராலயம் மற்றும் செங்கலடி புனித நிக்லஸ் ஆலயத்திலிருந்து அன்னையின் திருத்தலம் நோக்கிய பாதயாத்திரையும் தொடர்ந்து நற்கருணைவிழாவும் இடம்பெற்றன.
திருவிழா திருப்பலியை திருகோணமலை மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை கிறிஸ்டியன் நோயல் இம்மானுவேல் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
திருவிழா திருப்பலியில் மட்டக்களப்பு மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜோர்ச் ஜீவராஜ், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், அரசியல் மற்றும் நிர்வாக அதிகாரிகள், பொலிஸ் மற்றும் முப்படை அதிகாரிகள் மற்றும் நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான இறைமக்கள் கலந்து அன்னையின் ஆசீரை பெற்றுச்சென்றனர்.

