தேசிய கத்தோலிக்க ஆயர் பேரவை அங்கீகாரத்துடன் தேசிய கத்தோலிக்க ஊடக நிலையமும் கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களமும் இணைந்து நடாத்திய தர்மபிரபாஸ்வர விருது வழங்கும் நிகழ்வு நவம்பர் மாதம் 06ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் திருமதி சதுரி பிந்து அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் தேசிய ரீதியாகவும் மறைமாவட்டங்கள் ரீதியாகவும் பல்வேறு துறைகளை சேர்ந்த கலைஞர்கள் தெரிவுசெய்யப்பட்டு விருதுவழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.
யாழ். மறைமாவட்டத்திலிருந்து திரு. இராயப்பு திருத்துவராஜா, ஜெறாட் நோயல், பதுவைநாயகம் அன்ரன் கிருபைநாயகம், அன்ரனிப்பிள்ளை மங்களராசா ஆகியோரும் மன்னார் மறைமாவட்டத்திலிருந்து அன்ரன், மேரி மக்ரலின் ஜெயகெனடி, செபமாலை அன்ரனிதாசன் பெர்னான்டோ, வைரமுத்து கஜேந்திரன், பெலிஸ்ரன் சூசை, ரெறி அன்பழகன் ஆகியோரும் இவ்விருதுகளை பெற்றுக்கொண்டார்கள்.
அத்துடன் அன்றைய தினம் இலங்கை கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தால் நடாத்தப்பட்ட தமிழ்மொழி மூலமான பசாம் மற்றும் தவக்கால ஒப்பாரி புலம்பல் பாடல் போட்டியில் தேசிய ரீதியில் முதல் 10 இடங்களை பெற்றவர்களுக்கான பரிசளிப்பும் இடம்பெற்றது.
யாழ். மறைமாவட்டத்திலிருந்து 22 அணிகளும் மன்னார் மறைமாவட்டத்திலிருந்து 10 அணிகளும் பங்குபற்றிய இப்போட்டியில் மன்னார் மறைமாவட்டம் நானாட்டான் புனித கார்மேல் அன்னை ஆலய பங்கு முதலாமிடத்தையும் முருங்கன் புனித யாகப்பர் இளையோர் அணி இரண்டாமிடத்தையும் வஞ்சியன்குளம் புனித பேதுருவானவர் ஆலய அணி மூன்றாமிடத்தையும் பெற்றுக்கொண்டதுடன் யாழ். மறைமாவட்ட குருநகர் புனித யாகப்பர் ஆலய மறைப்பாடசாலை அணி ஆறாமிடத்தையும் மல்வம் பங்கு அணி எட்டாமிடத்தையும் பெற்றுக்கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

