நீதிக்கான பயணச் செயன்முறைக்குப் பொறுப்பானவர்கள் இதயசுத்தியுடனும் நியாய உணர்வுடனும் செயற்பட்டால், நீதிக்கான பயணம் நீண்டதாக இருக்காதென யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெபரட்ணம் அவர்கள் தெரிவித்துள்ளார்.

வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் சர்வதேச தினத்தை முன்னிட்டு, வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் ஏற்பாட்டில் ஆவணி 30ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

வலிந்து காணாமலாக்கப்படுதல் என்பது மனிதனால் மனிதனுக்கு இழைக்கப்படும் மிகக் கொடூரமான பேரவலம் எனக் குறிப்பிட்ட குருமுதல்வர் அவர்கள், ஆவணி 30 வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சர்வதேச தினத்தை மிகக்கொடூரமான மனிதர்களின் தினமெனவும் அடையாளப்படுத்த முடியுமெனவும் தெரிவித்தார்.

‘நீதிக்கான நீள்பயணம்’ என்ற கருப்பொருளில் இம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும், உண்மையில் நீதிக்கான பயணம் நீண்டதாக இருக்க வேண்டியதில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

நீதியை நிலைநாட்டும் பொறுப்பில் இருப்பவர்கள் நியாயமானவர்களாகவும், இதயசுத்தியுடனும் செயற்படக்கூடியவர்களாகவும் இருக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான விவகாரத்தில் நீதியை நிலைநாட்டுவதற்கான பொறுப்புகளை, நேர்மையுடனும் நியாயத்துடனும் நிறைவேற்றக்கூடியவர்கள் நியமிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

By admin