இலங்கை அமைச்சரைவயில் முன்மொழியப்பட்டு ஆவணி மாதம் 07ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்பட்ட 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை திருத்தச் சட்டமூலம் தொடர்பில் கவலை தெரிவித்துள்ள இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை நீதித்துறையின் சுயாதீனம், சட்டத்தின் ஆட்சி மற்றும் அதிகாரப் பிரிப்பு கோட்பாடு ஆகியவை எப்போதும் பாதுகாக்கப்பட வேண்டுமமென வலியுறுத்தியுள்ளது.

இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை தலைவர் பேரருட்தந்தை ஹரல்ட் அன்ரனி பெரேரா மற்றும் பொதுச்செயலாளர் பேருட்தந்தை அன்ரன் ரஞ்சித் ஆகியோர் கையொப்பமிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுயாதீனமானதும் பக்கச்சார்பற்றதுமான நீதித்துறை, நீதியை உறுதிப்படுத்துவதற்கும், அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், மனித கண்ணியத்தை நிலைநாட்டுவதற்கும், பொதுமக்களின் நலனை உறுதிப்படுத்துவதற்கும் அத்தியாவசியமானதென எடுத்துரைத்த பேரவை நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பதற்கான அரசியலமைப்புத் திருத்தம் நீதித்துறையின் சுயாதீனத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளது.

அனுபவமிக்க நீதியரசர்களைத் தக்கவைத்தல், நீதித்துறை அதிகாரிகளின் பற்றாக்குறையைத் தீர்த்தல் மற்றும் நீதி நிர்வாகத்தில் நிலவும் தாமதங்களைக் குறைத்தல் ஆகியவை இத்தகைய திருத்தத்தின் பிரதான நோக்கங்களாக இருக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ள பேரவை நீதித்துறையைப் பாதிக்கும் எந்தவொரு மாற்றமும் மிகவும் கவனமாக பரிசீலிக்கப்பட வேண்டுமெனவும் அதன் மூலம் நீதித்துறையின் சுயாதீனமும் நீதித்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையும் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் கேட்டுள்ளது.

By admin