2006ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் – தீவகம், அல்லைப்பிட்டி இராணுவப் பிரதேசத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்ட அருட்தந்தை திருச்செல்வம் நிஹால் ஜிம் பிறவுண் மற்றும் அவருடன் பயணித்த திரு. வென்சிலோஸ் வின்சன் விமலதாஸ் ஆகியோரின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, ஆவணி மாதம் 20ஆம் திகதி வியாழக்கிழமை அல்லைப்பிட்டியில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
அல்லைப்பிட்டி சந்தியிலிருந்து புனித பிலிப்புநேரியார் ஆலயம் வரை இடம்பெற்ற கவனயீர்ப்பு பேரணியுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
தொடர்ந்து ஆலயத்தில் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு, அகவணக்கம் செலுத்தப்பட்டதுடன் நினைவுரைகளும் இரங்கல் திருப்பலியும் இடம்பெற்றன.
நினைவுரைகளின் நிறைவில், அருட்தந்தை ஜிம் பிறவுண் மற்றும் திரு. விமலதாஸ் ஆகியோர் காணாமலாக்கப்பட்டமை தொடர்பில் உண்மையையும் நீதியையும் நிலைநாட்ட ஐக்கிய நாடுகள் சபை தலையிட வேண்டுமெனக் கோரும் அறிக்கையை, யாழ். மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு இயக்குனர் அருட்தந்தை அந்தோனிப்பிள்ளை அகஸ்ரின் அவர்கள் வாசித்தார்.
தொடர்ந்து, யாழ். மறைமாவட்ட குருக்கள் ஒன்றிய தலைவர் அருட்தந்தை றெக்ஸ் சவுந்தரா அவர்களின் தலைமையில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதுடன் திருப்பலி நிறைவில் இருவரின் நினைவாக ஆலய வளாகத்தில் மரக்கன்றுகளும் நாட்டப்பட்டன.
யாழ். மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், 2006ஆம் ஆண்டு ஆவணி மாதம் 20ஆம் திகதி காணாமலாக்கப்பட்ட இருவரும் இறுதியாக அல்லைப்பிட்டி இராணுவச் சோதனைச் சாவடிக்கு அருகில் காணப்பட்டதைக் குறிப்பிட்டு, இருபது ஆண்டுகள் கடந்தும் அவர்கள் எவ்வாறு காணாமலாக்கப்பட்டார்கள், அவர்களுக்கு என்ன நேர்ந்தது, அவர்களின் தற்போதைய நிலை என்ன என்பது தொடர்பில் குடும்பத்தினருக்கும் பொதுமக்களுக்கும் தெளிவான உண்மை வெளிப்படுத்தப்படாமை குறித்து கவலை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் வெளிப்படையான சுயாதீன விசாரணையை முன்னெடுக்க இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபையிடம் ஆணைக்குழு கோரிக்கைவிடுத்து சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவ மற்றும் காவல்துறை பதிவுகளை முழுமையாக வெளிப்படுத்தி அக்காலப்பகுதியில் அல்லைப்பிட்டியில் பணியாற்றிய இராணுவ மற்றும் பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகளை விசாரணைக்கு உட்படுத்தவும் கோரியுள்ளது.
அத்துடன், சாட்சிகள் மற்றும் குடும்பத்தினரின் பாதுகாப்பை உறுதிசெய்து, இருவருக்கும் என்ன நேர்ந்தது என்பதை முழுமையாக வெளிக்கொணர்ந்து பொறுப்புக்கூற வேண்டியவர்கள் அடையாளம் காணப்பட்டால் அவர்களை சட்டத்தின்முன் நிறுத்த நடவடிக்கை எடுக்கவேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளது.
இருபது ஆண்டுகளாகியும் உண்மை வெளிவராத நிலையில், இவ்வழக்கு மறக்கப்படவோ மௌனத்தில் புதைக்கப்படவோ கூடாதெனத் தெரிவித்துள்ள ஆணைக்குழு, உண்மையை வெளிக்கொணரவும் நீதியை நிலைநாட்டவும் ஐக்கிய நாடுகள் சபையும் சர்வதேச சமூகமும் தொடர்ந்து தலையிட வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளது.
இந்நினைவேந்தல் நிகழ்வு, காணாமலாக்கப்பட்ட இருவரையும் நினைவுகூரும் நிகழ்வாக மட்டுமன்றி, உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும், நீதி நிலைநாட்டப்பட வேண்டும், பொறுப்புக்கூறல் உறுதி செய்யப்பட வேண்டும் என்ற மக்களின் தொடர்ச்சியான கோரிக்கையையும் மீண்டும் உலகின் கவனத்திற்கு கொண்டுவந்தது.
அல்லைப்பிட்டி பங்கும் யாழ். மறைமாவட்ட குருக்கள் ஒன்றியமும் இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பங்குமக்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

