தீவக மறைக்கோட்ட பங்கு பீடப்பணியாளர்களுக்கான உருவாக்க பயிற்சி ஆவணி மாதம் 20,21ஆம் திகதிகளில் சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தலத்தில் நடைபெற்றது.
மறைக்கோட்ட பீடப்பணியாளர் இணைப்பாளரும் எழுவைதீவு பங்குத்தந்தையுமான அருட்தந்தை பொன்ராசா டினுஸன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இப்பயிற்சியின் முதல்நாளில் ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி முதல்வர் அருட்தந்தை அன்ரன் அமலதாஸ் அவர்களின் ‘பீடப்பணியாளர்கள் யார்’ என்னும் தலைப்பிலான கருத்துரையும் யாழ். திருமறைக்கலாமன்ற கலைஞர் திரு. ஜெகன் கரன்சன் தலைமையில் விளையாட்டுக்களுடன் குழுச்செயற்பாடுகள் நடைபெற்றன.
தொடர்ந்து மாலை கரப்பந்தாட்ட போட்டி, கடல் குளிப்பு என்பவற்றுடன் அகவொளி குடும்பநல நிலைய இயக்குநர் அருட்தந்தை மனுவேற்பிள்ளை டேவிட் அர்களின் ‘பீடப்பணியாளர்களிடம் இருக்கவேண்டிய மிக முக்கிய பண்புகளான பக்தி, ஒழுக்கம், பொறுப்புணர்வு’ என்னும் தலைப்பிலான கருத்துரை, கலைநிகழ்வுகள், தீப்பாசறை என்பன இடம்பெற்றன.
தொடர்ந்து 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரண்டாம் நாள் நிகழ்வுகள் நடைபெற்றதுடன் காலை யாழ். மறைமாவட்ட நிதிமுகாமையாளர் அருட்தந்தை நேசநாயகம் அவர்களின் தலைமையில் திருப்பலியும் தொடர்ந்து கருத்துரைகள், மதிப்பீடு, உதவுமுறை பயிற்சி மற்றும் இறையழைத்தல் நிகழ்வும் நடைபெற்றன.
தீவக மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங்க் அவர்கள் ‘பீடப்பணியாளர்களின் ஒழுக்கம்’ என்னும் தலைப்பிலும் யாழ். மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை ஜோண் குருஸ் அவர்கள் ‘மாற்றத்தை உருவாக்கும் நாளைய இளையோர்களாக இன்றைய நம்பிக்கை சின்னங்கள் நீங்களே’ என்னும் தலைப்பிலும் கிளறேசியன் சபை அருட்தந்தை வரதன் அவர்கள் ‘பீடப்பணியாளர்களும் அவர்களின் எதிர்காலமும்’ என்னும் தலைப்பிலும் யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடக மைய பணியாளர் செல்வி யூலியற் ஜோசப் அவர்கள் ‘மாணவர்களும் சமூக தொடர்பாடல்களும்’ என்னும் தலைப்பிலும் கருத்துரைகள் வழங்கியதுடன் மறைமாவட்ட திருவழிபாட்டு இயக்குநரும் கரம்பொன் பங்குத்தந்தையுமான அருட்தந்தை தயாகரன் அவர்கள் உதவுமுறை பயிற்சியையும் யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமட இயக்குநர் அருட்தந்தை செல்வரட்ணம் மற்றும் குருமட மாணவர்கள் இறையழைத்தல் நிகழ்வையும் நெறிப்படுத்தினர்.
இந்நிகழ்வில் தீவக மறைக்கோட்ட பங்குகளை சேர்ந்த 180 பீடப்பணியாளர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.

