கிளிநொச்சி, பல்லவராயன்கட்டு டொன் போஸ்கோ ஆங்கிலப் பாடசாலை மாணவர்களின் இரண்டாம் தவணை விடுமுறையை பயனுள்ளதாகவும் மகிழ்ச்சிகரமாகவும் மாற்றும் வகையில் முன்னெடுக்கப்பட்ட “கோடைகால பருவக் கொண்டாட்டம்” ஆவணி மாதம் 03ஆம் திகதி ஆரம்பமாகி 07ஆம் திகதி வரை அங்கு நடைபெற்றது.
பாடசாலை அதிபர் அருட்தந்தை மெல்வின் றோய் அவர்களின் தலைமையில் நிகழ்வுக் குழு உறுப்பினர்களின் ஒழுங்குபடுத்தலில் “இணைந்து கற்போம், இணைந்து வளர்வோம்” என்ற கருப்பொருளில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாணவர்கள் ஒக்ஸ்போர்ட், கேம்பிரிஜ், ஹவார்ட் மற்றும் ஸ்ரான்போர்ட் என நான்கு குழுக்களாகப் பிரிந்து இடம்பெற்ற போட்டிகளிலும் செயற்பாடுகளிலும் பங்குபற்றினர்.
இந்நிகழ்வில் மாணவர்களின் ஆர்வத்தையும் திறமைகளையும் வெளிப்படுத்தும் வகையில் வேடிக்கை விளையாட்டுகள், புதையல் வேட்டை, நடனப் போட்டிகள், கணித மற்றும் விஞ்ஞான வினாவிடைப் போட்டிகள், தீப்பாசறை, யோகா பயிற்சிகள் மற்றும் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்வுகளுடன் மாணவர்களின் கற்றல் அனுபவத்தையும் பொது அறிவையும் விரிவுபடுத்தும் வகையில் ஆங்கிலப் பாடப் பயிற்சிகள், வெளிக்களப் பயணங்கள் மற்றும் கல்விச் சுற்றுலாக்கள் போன்றவையும் இடம்பெற்றன.
மாணவர்கள் யாழ்ப்பாணம், அனுராதபுரம் மற்றும் மிகிந்தலை ஆகிய இடங்களை தரிசித்து அங்குள்ள வரலாற்று, பண்பாட்டு மற்றும் சமூக முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பார்வையிட்டனர்.
கோடைகால பருவக் கொண்டாட்டத்தின் முதல் நாள் நிகழ்வில் முழங்காவில் பிராந்திய பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் கிளிநொச்சி இரணைமாதா நகர் அ.த.க பாடசாலை அதிபர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

