மன்னார் மறைமாவட்டம் பேசாலை பங்கில் மேடையேற்றப்படவுள்ள ‘புனித அருளானந்தர் நாடக’ ஆற்றுகைக்கான ஆரம்ப நிகழ்வு ஆடி மாதம் 29ஆம் திகதி புதன்கிழமை பேசாலை புனித வெற்றிநாயகி அன்னை ஆலயத்தில் நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை சத்தியராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு நாடகத்தின் மூல ஏடு அவிழ்த்து நேர்ச்சை செய்யப்பட்டு, மேடைக்கான கன்னிக்கால் நாட்டிவைக்கப்பட்டது.
பேசாலையின் குருசுப்புலவர் என அழைக்கப்படும் அமரர் அவுறான் செபஸ்தியான் குருஸ் அவர்களால் 1962ஆம் ஆண்டு எழுதி மேடையேற்றப்பட்ட “புனித அருளானந்தர்” ஈரிரவு நாடகம் 37 வருடங்களின் பின்னர் மீண்டும் பேசாலைப் பங்கில் வருகிற புரட்டாதி மாதத்தின் இறுதிப் பகுதியில் வெகு விமரிசையாக மேடையேற்றப்படவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

