எமது மறைமாவட்டத்தின் சில ஆலயங்களில் குறிப்பிட்ட சில பொது நிலையினரின் ஆதிக்கம் நீடிக்கும் வரை, கூட்டொருங்கியக்க திருஅவையின் உண்மையான நடைமுறைப்படுத்தல் சாத்தியமற்றதாகவே இருக்குமென மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெபரட்ணம் அவர்கள் யாழ்ப்பாண மறைக்கோட்ட அருட்பணி சபையினருக்கான ஒன்றுகூடலில் சிறப்புரையாற்றியபோது எடுத்துரைத்துள்ளார்.
ஆடி மாதம் 18ஆம் திகதி கடந்த சனிக்கிழமை யாழ். புனித மரியன்னை பேராலய ஆயர் யஸ்ரின் மண்டபத்தில் மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கூட்டொருங்கியக்க திருஅவையின் இறுதி ஆவணத்தொகுப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள விடயங்களை பங்கு, ஆலயத், திருஅவைகளில் நடைமுறைப்படுத்துவதற்கான பொறிமுறைகள் தொடர்பான சிறப்புரைகளும் மறைக்கோட்ட அருட்பணிச்சபை செயற்குழுவிற்கான புதிய செயலாளர் மற்றும் பொருளாளர் தெரிவும் இடம்பெற்றன.
கூட்டொருங்கியக்க திருஅவை செயற்பாடுகளை பங்குகளில் நடைமுறைப்படுத்துவது தொடர்பாக இலங்கை ஆயர் பேரவை வெளியிட்ட மேய்ப்பு பணி சுற்றுமடல் உள்ளடக்கிய விடயங்கள் தொடர்பாக மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெபரட்ணம் அவர்களும், கூட்டொருங்கியக்க திருஅவையின் ஒன்றிப்பு பங்கேற்பு மறைத்தூதுப்பணியின் நடைமுறை செயற்பாடுகள் தொடர்பாக புனித பிரான்சிஸ்கு சவேரியார் உயர் குருத்துவக்கல்லூரி விரிவுரையாளர் அருட்தந்தை ரவிராஜ் அவர்களும் சிறப்புரையாற்றினார்கள்.
சிறப்புரைகளைத் தொடர்ந்து குழு ஆய்வுகளும், கலந்துரையாடலும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பங்கு பிரதிநிதிகளென 40 வரையானவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

