ஜெயபுரம் திருச்சிலுவை முன்பள்ளி சிறார்களின் விளையாட்டு போட்டி ஆனி மாதம் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
முன்பள்ளி ஆசிரியர்கள் செல்வி யுவக்கீன்பிள்ளை ஞானேஸ்வரி மற்றும் திருமதி கோபிதாஸ் லக்சலா ஆகியோரின் ஒழுங்குபடுத்தலில் இயக்குனர் அருட்தந்தை அன்ரனிபாலா அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மைதான விளையாட்டுக்களுடன் வினோத உடை, இசையும் அசைவும், பெற்றோருக்கான விளையாட்டுக்கள் மற்றும் பரிசளிப்பு என்பன இடம்பெற்றன.
நிகழ்வின் ஆரம்பத்தில் விருந்தினர்கள் புதிதாக உருவாக்கப்பட்ட முன்பள்ளி சிறார்களின் பாண்ட் வாத்திய குழுவினரால் மைதானத்திற்கு அழைத்துவரப்பட்டு சிறார்களின் மைதான விளையாட்டுக்களாகிய தாரா நடை, நீர் நிரப்புதல், பழம் பொறுக்குதல் என்பன முன்னெடுக்கப்பட்டன.
அமலமரித்தியாகிகள் சபை அன்பக நிறுவன இயக்குனர் அருட்தந்தை செலஸ்ரின் மஸ்கிறிஞ்ஞ அவர்கள் பிரதம விருந்தினராகவும் டொன்பொஸ்கோ சலேசியன் சபை அருட்சகோதரி அனற் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் கிராம சேவையாளர், ஏனைய முன்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களும் பங்குபற்றினர்.
1990ஆம் ஆண்டு ஜெயபுரம் தெற்கு வனப்பகுதியில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்திருந்த மக்கள் மத்தியில் வைத்திய சேவையை வழங்கிய திருச்சிலுவை அருட்சகோதரிகளால் 60 பிள்ளைகளுடன் ஆரம்பிக்கப்பட்ட இம்முன்பள்ளி அருட்சகோதரிகள் கிளயா, லௌறா, அமிர்தா, லுசினா, அமல் என்பவர்களின் அயரா முயற்சியால் வளர்ச்சியடைந்துள்ள நிலையில் தற்போது 23 பிள்ளைகள் இங்கு பயின்றுவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

