ஜேர்மனி நாட்டின் “கோதே” ((Goethe-Institut) ) கலாசார நிறுவனத்தின் ஆதரவில் Bio – Lab “உயிரியல்-ஆய்வகம்” செயற்பாட்டுக் குழுவினரால் முன்னெடுக்கப்பட்ட “கடற்பாசி வளர்ப்பும் பெறுமதிசேர் விளைபொருட்களும்” கண்காட்சி வைகாசி மாதம் 28ஆம் திகதி தொடக்கம் 30ஆம் திகதி வரை யாழ்ப்பாணம் கண்டி வீதியில் அமைந்துள்ள “கலம்” இல்லத்தில் நடைபெற்றது.
கடலோரக் கிராமியச் சமூகங்கள் பாரம்பரிய கடல்பாசி அறுவடைக்கு கூடுதல் பெறுமதி சேர்த்தல், பாரம்பரிய வேலை முறைகளை பன்முகப்படுத்தி கடலோரப் பொருளாதாரத்தை முன்னேற்றல் என்பவற்றை விளக்கும் வகையில் கடற்பாசியில் இருந்து தயாரிக்கப்பட்ட பெறுமதிசேர் விளைபொருட்கள், மற்றும் விளக்கப் படங்கள் காட்சிப்படுத்தப்பட்டதுடன் தொண்டர்களின் விளக்கவுரைகளும் இடம்பெற்றன.
“கோதே” நிறுவனத்தின் நவமான எண்ணக்கருவில், கிளிநொச்சி மாவட்டம் வலைப்பாடு கடலோரக் கிராமத்தில், கணினி வடிவமைப்பாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் கலைஞர்கள் என்ற பல்துறை வல்லுநர்களை Bio-Lab எனும் பெயரில் ஒரே இடத்தில் ஒன்றுகூட்டி, கடற்பாசியை ஒரு நிலையான, உயிருள்ள, வடிவமைக்கத்தக்க பொருளாக ஆராய்ந்து பரிசோதனை செய்து வாய்ப்புப்பார்க்கும் ஆழ்ந்த ஆய்வுத் திட்டமாக இது நடைபெற்றது.

