தமிழ் சட்டத்தரணிகள் பேரவையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளுக்கிடையிலான மூன்றாம் கட்ட கலந்துரையாடல் வைகாசி மாதம் 06ஆம் திகதி புதன்கிழமை கொழும்பில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் இலங்கை சுதந்திரமும் இறைமையும் தன்னாதிக்கமும் கொண்ட மாநில அரசுகள் இணைந்த சமஸ்டி அரசாகும்: தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமையுடைய தேசிய இனம் என்பதுடன் வடக்கு மற்றும் கிழக்கு இணைந்த மாநிலம் தமிழ் பேசும் மக்களின் மரபுவழித் தாயகமாகும்: தேசிய பாதுகாப்பு, நாணயம் மற்றும் வெளியுறவுக் கொள்கைகள் தவிர்ந்த ஏனைய விடயங்கள் அனைத்தும் மாநில அரசுகளுக்கே வழங்கப்பட்டவையாக இருத்தல் வேண்டும்: மாநில அரசுகளின் இறைமை அம்மாநிலங்களின் மக்களுக்கானதும் பாராதீனப்படுத்தப்பட முடியாததுமாகும்: மத்திய அரசின் அதிகாரங்களும் மாநில தன்னாட்சி அரசுகளின் அதிகாரங்களும் தெளிவாக வரையறுக்கப்பட்டு மாநிலங்களுக்கு வழங்கப்படும் விடயங்கள் தொடர்பான முழு அதிகாரங்களும் மாநிலங்களுக்கே இருக்க வேண்டுமென்பதுடன் அவை மீளப்பெற முடியாதவையாக அங்கீகரிக்கப்பட வேண்டும்: இலங்கை அரசிற்கும் மாநில அரசுகளுக்குமிடையிலான அரசியலமைப்புசார் பிணக்குகளையும், மாநில அரசுகளுக்கிடையிலான அரசியலமைப்புசார் பிணக்குகளையும் மற்றும் ஏனைய அரசியலமைப்புசார் விடயங்களையும் விசாரித்து தீர்ப்பளிப்பதற்கென தனியான அரசியலமைப்பு நீதிமன்றம் ஸ்தாபிக்கப்படுதல் வேண்டும்: இலங்கை மதச்சார்பற்ற அரசாக இருக்க வேண்டும்: தமிழ் மற்றும் சிங்கள மொழிகள் சம அந்தஸ்துடைய தேசிய, அரச, சட்டவாக்க, நிர்வாக மற்றும் நீதிமன்ற மொழிகளாகுமெனவும் ஆங்கிலம் இணைப்பு மொழியாக அமையும்: போன்ற அரசியல் அமைப்பில் உள்ளடக்கப்பட வேண்டிய உடன்பாடுகள் எடுக்கப்பட்டன.

மேலும், இவ் அடிப்படை அம்சங்களை கொண்டு புதிய அரசியலமைப்பில் தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கான விரிவான வரைபை தயாரிப்பதற்காக தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவை முன்மொழிந்த வரைபுக்குழுவுடன் இணைந்து செயற்பட அரசியல் கட்சிகள் தங்களது பிரதிநிதிகளின் பெயர்களை இரண்டு வாரங்களுக்குள் சமர்ப்பிக்க ஒப்புக்கொண்டுள்ளன.

அத்துடன் கடந்த மார்ச் மாதம் 2ஆம் திகதி நடைபெற்ற முதலாவது கலந்துரையாடலில் ஏற்கப்பட்ட தீர்மானங்களான தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு நிலையான தீர்வை எட்டும் நோக்கில் தமிழ் மக்களின் இறைமை மற்றும் சுயநிர்ணய உரிமை போன்ற அபிலாi~களை உள்ளடக்கிய சமஸ்டி முறையிலான அரசியலமைப்பொன்றே அவசியமானது எனும் பொதுத்தீர்மானத்தை ஏற்றுக்கொண்டு, அவ்வாறான சமஸ்டி முறையிலான அரசியலமைப்புக்கான சமூக ஒப்பந்தத்தமொன்றை தமிழ் மற்றும் சிங்கள மக்களுக்கிடையில் மேற்கொள்வதற்கான வரைபை தயாரித்தல்: புதிய அரசியலமைப்பினுள் உள்ளடக்கப்பட வேண்டிய சமஸ்டிக்கான அடிப்படை அம்சங்கனை உள்ளடக்கிய விரிவான அரசியலமைப்பு வரைபை தயாரித்தல்: பங்குபற்றிய கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களும் கட்சிப் பிரதிநிதிகளும் புதிய அரசியலமைப்பு தொடர்பில் மேற்குறித்த உடன்பட்ட விடயங்களில் தொடர்ந்து ஒன்றாகச் செயற்படுதல்: சந்திப்பு இடம்பெற்ற திகதியிலிருந்து இலங்கை அரசாங்கத்தின் அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பான எந்தவொரு கலந்துரையாடல்களிலும் தனித்தோ, கட்சி அடிப்படையிலோ ஈடுபடுவதில்லை போன்றவற்றை தொடர்ந்தும் கடைப்பிடிப்பதாக மீளவும் உறுதிப்படுத்தப்பட்டது.

By admin