இராணுவக்கட்டுப்பாட்டிலுள்ள யாழ்ப்பாணம் வலிகாகம் வடக்கு பிரதேச காணிகளை விடுவிக்கக் கோரி முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் ஆனி மாதம் 15ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை யாழ். மாவட்டச் செயலக முன்றலில் நடைபெற்றது.
போராட்ட நிறைவில் ஜனாதிபதிக்கு கையளிக்கப்பட வேண்டிய கோரிக்கைகள் அடங்கிய மகஜர் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் மற்றும் வட மாகாண ஆளுநர் திரு. நாகலிங்கம் வேதநாயகன் ஆகியோரிடம் கையளிக்கப்பட்டது.
இப்போராட்டத்தில் மதத்தலைவர்கள், அரசியல் தலைவர்கள், சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்களென பலரும் கலந்துகொண்டனர்.
தம் சொந்த இடத்தை விட்டு வெளியேறி 36 வருடங்கள் நிறைவடைந்த நிலையில் தம் காணிகளை விடுவித்து தம்மை மீள் குடியமர்த்துமாறு வலிகாகம் வடக்கு குறிப்பாக ஊறணி, மயிலிட்டு பிரதேச மக்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

