இலங்கை தேசிய கத்தோலிக்க இளையோர் ஒன்றியத்தின் 85ஆவது தேசிய கத்தோலிக்க இளையோர் ஒன்றுகூடல் சித்திரை மாதம் 24ஆம் திகதி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி மட்டக்களப்பு மறைமாவட்டத்தில் நடைபெற்றுவருகின்றது.
மட்டக்களப்பு மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை அன்ரனி டிலிமா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மட்டக்களப்பு, தாழங்குடா, மியானி தொழில்நுட்ப நிறுவனத்தில் “நமக்குள் தொலைந்த இளமை: மீளக் கண்டறியும் ஒரு பயணம்” என்னும் கருப்பொருளில் இந்நிகழ்வு நடைபெற்றுவருகின்றது.
இந்நிகழ்வில் கொடிகள் ஏற்றப்பட்டு தொடர்ந்து கலைநிகழ்வுகளுடன் இணைந்த ஆரம்ப நிகழ்வு நடைபெற்றதுடன் இரவு நிர்வாக சபை கூட்டம் மற்றும் குழுச்செயற்பாடுகள் இடம்பெற்றன.
முதல்நாள் நிகழ்வில் தேசிய இளையோர் ஆணைக்குழுவிற்கு பொறுப்பான இரத்தினபுரி மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அன்ரன் வைமன் குருஸ், மட்டக்களப்பு மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
தொடர்ந்து 25ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்றுவரும் நிகழ்வில் கருத்துரைகள், குழுச்செயற்பாடுகள், கலந்துரையாடல்கள், வழிபாடுகள், வெளிக்கள பயணம், மகிழ்வூட்டல் செயற்பாடுகள் என்பன இடம்பெறுகின்றன.
இந்நிகழ்வுகள் 26ஆம் திகதி நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை நிறைவடையவுள்ளதுடன் இந்நிகழ்வில் தேசிய இளையோர் ஆணைக்குழு இயக்குனர் அருட்தந்தை லெஸ்ரர் விஜேசூர்ய அவருடன் இணைந்து ஏனைய மறைமாவட்ட இயக்குனர்கள் குருக்கள் துறவிகள் மற்றும் 12 மறைமாவட்டங்களிலிருந்தும் வருகைதந்த 120 வரையான இளையோரும் கலந்து கொண்டுள்ளதுடன் யாழ். மறைமாவட்டத்திலிருந்து மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை ஜோண் குருஸ் அவர்களுடன் 07 இளையோரும் பங்குபற்றியுள்ளனர்.

