இலங்கை பாடசாலைகள் காற்பந்தாட்ட சங்கம் தேசிய ரீதியில் நடாத்திய 14 வயதுப் பிரிவினருக்கான SAMAPOSHA CHAMPION TROPHY கிண்ணத்துக்கான காற்பந்தாட்ட இறுதிப் போட்டி மாசி மாதம் 11ஆம் திகதி கடந்த புதன்கிழமை கொழும்பு RACE COURSE விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி மற்றும் கொழும்பு சாகிராக் கல்லூரி பங்குபற்றிய நிலையில் சாகிராக் கல்லூரி 03:00 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை கைப்பற்றியதுடன் புனித பத்திரிசியார் கல்லூரி இரண்டாமிடத்தையும் பெற்றுக்கொண்டது.

இப்போட்டிக்கான தெரிவுப்போட்டி மாசி மாதம் 6,7,8ஆம் திகதிகளில் காலி பத்தேகம பிரதேச சபை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் கும்ம விளையாட்டு மைதானங்களில் இடம்பெற்றது.

இப்போட்டியில் பங்குபற்றிய யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி அணி காலிறுதிக்கு முந்திய போட்டியில் பதுளை அல் அதான் கல்லூரியையும் காலிறுதி போட்டியில் நீர்கொழும்பு அல்ஹிலால் சர்வதேச பாடசாலையையும் அரையிறுதி போட்டியில் கொழும்பு Gateway சர்வதேச பாடசாலையையும் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு தெரிவாகியிருந்தது.

அத்துடன் இறுதிப்போட்டியில் பங்குபற்றிய யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும் மாசி மாதம் 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை கல்லூரி மத்தியூஸ் மண்டபத்தில் நடைபெற்றது.

கல்லூரி அதிபர் அருட்தந்தை திருமகன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் காற்பந்தாட்ட அணிவீரர்கள் பாண்ட் வாத்திய இசையுடன் பாடசாலைக்குள் அழைத்துவரப்பட்டு பதக்கங்கள் அணிவிக்கப்பட்டு பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. சிவகரன் மற்றும் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் ஆகியோர் கலந்து இந்நிகழ்வை சிறப்பித்தனர்.

By admin