தவக்காலத்தை முன்னிட்டு வவுனிக்குளம் கல்வாரிப்பூங்கா யாத்திரைத்தலத்தில் இவ்வருடமும் தவக்கால தியானங்கள் நடாத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக திருத்தல பரிபாலகர் அருட்தந்தை நியூமன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
மறைக்கோட்ட ரீதியாக நடைபெறவுள்ள இத்தியானங்களில் மாசி மாதம் 21ஆம் திகதி இளவாலை மறைக்கோட்டத்திற்கும் மாசி மாதம் 28ஆம் திகதி கிளிநொச்சி மறைக்கோட்டத்திற்கும் பங்குனி மாதம் 07ஆம் திகதி தீவக மற்றும் பருத்தித்துறை மறைக்கோட்டங்களிற்கும் பங்குனி மாதம் 14ஆம் திகதி யாழ்ப்பாண மறைக்கோட்டத்திற்கும் பிரத்தியேகமான நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் அன்றைய தினம் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களின் தலைமையில் சிறப்பு திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்படும்.
தொடர்ந்து பங்குனி மாதம் 21ஆம் திகதி முல்லைத்தீவு மறைக்கோட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளதுடன் அன்றைய தினம் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் சிறப்பு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படுமெனவும் பங்குனி மாதம் 28ஆம் திகதி பொது வழிபாடுகள் இடம்பெறவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

