மன்னார் மடுத்திருத்தல ஆவணிமாத திருவிழா பரிபாலகர் அருட்தந்தை பெப்பி சோசை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆகஸ்ட் மாதம் 15ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்றது.

6ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 13ஆம் திகதி வியாழக்கிழமை மெழுகுவர்த்தி பவனியும் 14ஆம் திகதி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நற்கருணைவிழாவும் இடம்பெற்றன.

திருவிழா திருப்பலியை கொழும்பு உயர் மறைமாவட்ட பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

இத்திருப்பலியில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம், பதுளை மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யூட் நிஸாந்த சில்வா, மன்னார் மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னான்டோ, அனுராதபுர மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் பேரருட்தந்தை நொபேட் அந்த்ராடி ஆகியோர் கலந்துகொண்டனர்.

திருப்பலி நிறைவில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்கள் அப்போஸ்தலிக்க ஆசீர்வாதத்தை இலத்தீன் மொழியில் வழங்கினார்.

திருவிழா திருப்பலியை தொடர்ந்து அன்னையின் திருச்சொருப பவனியும் ஆசீர்வாதமும் இடம்பெற்றன. ஆசீரை பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் அவர்கள் வழங்கினார்.

இத்திருப்பலியில் 10 இலட்சத்துக்கும் அதிகமான இறைமக்கள் கலந்து அன்னையின் ஆசீரைப் பெற்றுக்கொண்டனர்.

By admin