பூநகரி பங்கிற்குட்பட்ட மண்ணித்தலை புனித செபஸ்தியார் திருத்தல வருடாந்த திருவிழா முன்னாயத்த கலந்துரையாடல் ஆவணி மாதம் 19ஆம் திகதி கடந்த புதன்கிழமை பூநகரி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்கள உத்தியோகத்தர் மற்றும் பிரதேச கலாசார உத்தியோகத்தரின் ஒழுங்குபடுத்தலில் பிரதேச செயலாளர் திரு. ஆயகுலன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் திருவிழாவின்போது திருத்தலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய சுகாதாரம், மருத்துவம், குடிநீர், போக்குவரத்து, உணவு, பாதுகாப்பு, மின்சாரம் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டதுடன் திருவிழா காலங்களில் பொலித்தீன், போதைப்பொருள் பாவனைக்கு தடை விதித்து படகில் வரும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி மட்டுப்படுத்தப்பட்ட நபர்கள் மட்டும் பயணிக்க முடியுமெனவும் தீர்மானம் எடுக்கப்பட்டது.
இக்கலந்துரையாடலில் பூநகரி பங்குத்தந்தை அருட்தந்தை நிலான் யூலியஸ், பிராந்திய சுகாதார பணிப்பாளர், பூநகரி, மண்ணித்தலை மீனவ சங்க உறுப்பினர்கள், பூநகரி வைத்தியசாலை வைத்தியர், பிரதேச சபை செயலாளர், கிராம சேவையாளர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், இலங்கை மின்சார சபை, போக்குவரத்துப் பிரிவு, அனர்த்த முகாமைத்துவப்பிரிவு உத்தியோகத்தர்கள், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, கடற்படையினர், ஆலய நிர்வாக உறுப்பினர்கள், கலாசார உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இம்மாதம் 25ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் திருவிழாவுக்கான ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 29ஆம் திகதி சனிக்கிழமை காலை திருவிழா திருப்பலி இடம்பெறும்.
பழமை வாய்ந்ததும், வரலாற்று சிறப்புமிக்கதுமான மண்ணித்தலை புனித செபஸ்தியார் திருத்தல திருவிழாவிற்கு பாசையூர், பூநகரி பிரதேசங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்கின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

