கனடா நாட்டில் இறைவனடி சேர்ந்த யாழ். மறைமாவட்ட குரு அருட்தந்தை அன்ரனி பெர்னாண்டோ பெனற் அவர்களின் இறுதி நல்லடக்க திருப்பலி, புரட்டாதி மாதம் 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது.
கனடாவிலிருந்து கொண்டுவரப்பட்ட அருட்தந்தையின் பூதவுடல், புரட்டாதி மாதம் 24ஆம் திகதி வியாழக்கிழமை காலை 7.00 மணிக்கு ஆயர் இல்ல சிற்றாலயத்திற்கு கொண்டுவரப்பட்டு, மறுநாள் பிற்பகல் 1.00 மணி வரை குருக்கள், துறவியர், உறவினர்கள் மற்றும் இறைமக்களின் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
தொடர்ந்து, பூதவுடல் புனித மரியன்னை பேராலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் அவர்களின் தலைமையில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
திருப்பலி நிறைவில் அருட்தந்தை அன்ரனி பெர்னாண்டோ பெனற் அவர்களின் பூதவுடல் புனித கொஞ்சேஞ்சி மாதா மறுவாழ்வு முற்றத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம், யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மறைமாவட்டங்களைச் சேர்ந்த குருக்கள், துறவியர், உறவினர்கள் மற்றும் இறைமக்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து அருட்தந்தையின் ஆன்ம இளைப்பாற்றிக்காக செபித்தனர்.
1989ஆம் ஆண்டு குருவாக திருநிலைப்படுத்தப்பட்ட இவர் மயிலிட்டி, இளவாலை, பரந்தன் பங்குகளின் உதவி பங்குத்தந்தையாகவும் சண்டிலிப்பாய் பங்கின் பதில் பங்குத்தந்தையாகவும் கரவெட்டி, மானிப்பாய், கிளிநொச்சி, பருத்தித்துறை, பரந்தன் பங்குகளின் பங்குத்தந்தையாகவும் ஜேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியக இயக்குநராகவும் மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய இயக்குநராகவும் கிளிநொச்சி, பருத்தித்துறை மறைக்கோட்டங்களின் முதல்வராகவும் பணியாற்றியுள்ளதுடன் வவுனியா செட்டிக்குளம் இடம்பெயர்ந்தோர் முகாமிலும் சேவையாற்றியுள்ளார்.
யுத்தம், இடம்பெயர்வு மற்றும் துயரத்தின் மத்தியில் மக்களோடு பயணித்த அருட்தந்தை அவர்கள் வன்னிப் போர்க்காலத்தில் மக்களுக்கு ஆறுதலாகவும், குருக்களுக்கு துணையாகவும் பணியாற்றினார். மடு அன்னையின் திருச்சொரூபத்தை வன்னியிலிருந்து மன்னாருக்கு பாதுகாப்பாக எடுத்துச் செல்வதிலும் முக்கிய பங்காற்றினார்.

