பிலிப்பைன்ஸ் நாட்டின் லீபா உயர் மறைமாவட்டத்தில் உள்ள புனித பாதர் பியோ தேசிய திருத்தலம், செப்டம்பர் 23ஆம் திகதி 30ற்கும் அதிகமான ஆயர்கள் புடைசூழ கடந்த புதன்கிழமை அதிகாரப்பூர்வமாக சர்வதேச திருத்தலமாக உயர்த்தப்பட்டது.
வத்திக்கானின் நற்செய்தி அறிவிப்புக்கான திருப்பீடத் துறையினால் மே 25ஆம் திகதி வெளியிடப்பட்ட ஆணையின் அடிப்படையில் இவ்வுயர்வு இடம்பெற்றது. புனித பாதர் பியோவின் திருவிழா நாளுடன் இணைந்ததாக நடைபெற்ற இந்நிகழ்வில், திருப்பலி மற்றும் சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றதுடன், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயர்கள் மற்றும் இறைமக்கள் பெருமளவில் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில் வத்திக்கான் தூதுவர் பேராயர் Charles John Brown, லீபா பேராயர் Gilbert Garcera, மணிலா பேராயர் கர்தினால் Jose Advincula, கலூக்கான் ஆயர் கர்தினால் Pablo Virgilio David உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இலங்கை ஆயர் மன்றத்தின் பிரதிநிதியாக திருகோணமலை மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை கிறிஸ்டியன் நோயல் இம்மானுவேல் அவர்களுடன் வங்காளதேசம், பாகிஸ்தான், தைவான், இந்தியா மற்றும் இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த ஆசிய ஆயர்களும் கலந்து கொண்டனர்.
இத்திருத்தலம் பிலிப்பைன்ஸ் நாட்டின் இரண்டாவது சர்வதேச திருத்தலமாக உயர்த்தப்பட்ட சிறப்பான நிகழ்வைத் தொடர்ந்து கலைநிகழ்வுகளும் அங்கு நடைபெற்றன.
அத்துடன் மறுநாள் 24ஆம் திகதி, நிகழ்வில் கலந்துகொண்ட ஆயர்கள் மற்றும் ஏனைய நாடுகளிலிருந்து வருகைதந்திருந்த இறைமக்களுக்கான திருப்பயணமும் நடைபெற்றது. இத்திருப்பயணத்தில் உயர்மறைமாவட்ட முதன்மை பேராலயம் மற்றும் துனைப் பேராலயங்களை யாத்திரையில் ஈடுபட்ட ஆயர்கள் உட்பட்ட திருப்பயணிகள் தரிசித்தார்கள்.

