யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமட வருடாந்த திருவிழா குருமட அதிபர் அருட்தந்தை செல்வரட்ணம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நவம்பர் மாதம் 08ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருவிழா திருப்பலியை யாழ். மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார். திருப்பலியை தொடர்ந்து குருமட கேட்போர் கூடத்தில் கலைநிகழ்வுகள் இடம்பெற்றன.
கலைநிகழ்வில் குருமட மாணவர்களின் படைப்பான “தேன் அரும்பு” கையெழுத்து நூலின் 18ஆவது இதழ் அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களால் வெளியிட்டுவைக்கப்பட இதழுக்கான மதிப்பீட்டுரை சக்கோட்டைப் பங்குத்தந்தை அருட்தந்தை பாலதாஸ் பிறாயன் அவர்களால் வழங்கப்பட்டது.
தொடர்ந்து சிறப்பு நிகழ்வாக புனித சவேரியார் உயர் குருத்துவக்கல்லூரி உப அதிபர் அருட்தந்தை ஜெராட் அவர்களின் நெறியாள்கையில் புகழ்பெற்ற கிரேக்க நீதிக்கதைகளை எழுதிய ஈசாப் என்பவரை மையமாகக்கொண்ட Absolutely Aesop எனும் ஆங்கில நகைச்சுவை நாடகம் குருமட மாணவர்களினால் மேடையேற்றப்பட்டு பார்வையாளர்களின் பாராட்டையும் பெற்றுக்கொண்டது.
அத்துடன் அன்றைய நாளை சிறப்பித்து அன்று மாலை விளையாட்டு நிகழ்வுகள் அங்கு நடைபெற்றதுடன் இந்நிகழ்வுகளில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை மனுவேற்பிள்ளை டேவிட், குருமட மாணவர்கள், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், அருட்சகோதர்கள், ஆசிரியர்களென பலரும் கலந்துகொண்டனர்.
யாழ். மறைமாவட்டத்தின் இதயமாக விளங்கும் 157 ஆண்டுகள் பழமைவாய்ந்த இக்குருமடம் தமிழ் மறைமாவட்டங்களில் பணியாற்றிய இன்னும் பணியாற்றிக்கொண்டிருக்கும் ஆயர்களையும் ஆயிரக்கணக்கான குருக்களையும் உருவாக்கிவருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

