இரத்தினபுரி மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் பேரருட்தந்தை கிளீற்ரஸ் சந்திரஸ்ரீ பெரேரா அவர்கள் ஆவணி மாதம் 24ஆம் திகதி திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

1947ஆம் ஆண்டு செப்டெம்பர் 6ஆம் திகதி கொழும்பு சீதுவையில் பிறந்த பேரருட்தந்தை கிளீற்ரஸ் பெரேரா அவர்கள் 1973ஆம் ஆண்டு ஆவணி மாதம் 4ஆம் திகதி புனித பெனடிக்ட் துறவறச் சபை குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.

இவர் கண்டி புனித அந்தோனியார் பேராலயம், வாஹாகொட்டே பங்குகளின் பங்குத்தந்தையாகவும் மறைமாவட்ட குருமுதல்வராகவும், இளையோர் ஆணைக்குழு இயக்குநராகவும், மறைமாவட்ட மேய்ப்புப்பணி நிலைய இயக்குநராகவும், கத்தோலிக்க தனியார் பாடசாலைகளின் பொது முகாமையாளராகவும், மரியாயின் சேனை ஆன்மீக இயக்குநராகவும் இலங்கையின் புனித பெனடிக்ட் துறவற சபை தலைமைத் அருட்தந்தையாகவும் கடமையாற்றினார்.

தொடர்ந்து 2007ஆம் ஆண்டு ஆடி மாதம் 11ஆம் திகதி உரோமையிலுள்ள பன்னிரு திருத்தூதர்களின் பேராலயத்தில் இரத்தினபுரி மறைமாவட்ட ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்டு அதே ஆண்டு ஆடி மாதம் 28ஆம் திகதி இரத்தினபுரி புனித பேதுரு பவுல் பேராலயத்தில் இரத்தினபுரி மறைமாவட்டத்தின் ஆயராகப் பதவியேற்ற இவர் இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையின் சமயங்களிடையேயான உரையாடல் மற்றும் கிறிஸ்தவ ஒன்றிப்பு ஆணைக்குழுவின் தலைவராகவும், மறைப்பணி நடவடிக்கை ஆணைக்குழுவின் தலைவராகவும் பணியாற்றி 2024ஆம் ஆண்டு மார்ச் 5ஆம் திகதி ஓய்வுபெற்றார்.

ஆயர் அவர்களின் பணிவாழ்விற்கு நன்றிகூறி அன்னாரின் ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்.

By admin