அமலமரித்தியாகிகள் சபையின் ஒழுங்குகளும் சட்டங்களும் திருத்தந்தையினால் அங்கீகரிக்கபட்டதன் 200ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு ஆவணி மாதம் 22ஆம் திகதி சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

யாழ். மாகாண அமலமரித்தியாகிகள் சபையின் ஏற்பாட்டில் மாகாண முதல்வர் அருட்தந்தை போல் ஜெயந்தன் பச்சேக் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ்ப்பாணம் பொதுநூலகத்திலிருந்து யாழ். புனித மரியன்னை பேராலயம் வரையிலான நடை பவனியும் தொடர்ந்து பேராலயத்தில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் நன்றித்திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டது.

திருப்பலி நிறைவில் ஆலய வளாகத்தில் அரங்கநிகழ்வுகள் இடம்பெற்றன.

அரங்க நிகழ்வில் கிராமிய நடனம், இசை உரை சித்திரம், ‘மௌனத்தின் ஓலம்’ நாடகம், என்பவற்றுடன் சிறப்பு நிகழ்வாக யாழ். திருமறைக்கலாமன்ற கலைஞர்களால் இலங்கையில் அமலமரித்தியாகிகள் ஆற்றிய பணிகளின் வரலாற்றை கூறும் நடன நாடகமும் மேடையேற்றப்பட்டதுடன் இலங்கையில் அமலமரித்தியாகிகளின் பணிகள் பங்களிப்புகள் பற்றிய ஆய்வுக் கட்டுரைகளை உள்ளடக்கிய ‘முன்னோடிகள்’ நூல் வெளியீடும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம், திருகோணமலை மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை நோயல் இம்மானுவேல், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் திருகோணமலை மறைமாவட்ட அமலமரித்தியாகிகள் பணித்தள இறைமக்களென 500 வரையானவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

By admin