ஊர்காவற்துறை கரம்பொன் சிறிய புஸ்பம் மகளிர் மகா வித்தியாலயம் ஆரம்பிக்கப்பட்டதன் 110ஆவது ஆண்டு நிறைவை சிறப்பித்து இவ்வருடம் பல நிகழ்வுகளை அங்கு நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதன் ஆரம்ப நிகழ்வாக பாடசாலை அதிபர் அருட்சகோதரி மெக்ரலின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் பாடசாலை மாணவர்கள், பழையமாணவர்கள் ஆசிரியர்கள் இணைந்து முன்னெடுத்த நடைபவனி, ஆடி மாதம் 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை அங்கு நடைபெற்றது.
பாடசாலையில் ஆரம்பமாகிய இப்பவனி ஊர்காவற்துறை பிரதேச செயலகம், ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி, ஊர்காவற்துறை நகரம், புனித மரியன்னை ஆலயம், பிரதான வீதி, கரம்பொன் புனித செபஸ்தியார் ஆலயம் என்பவற்றின் ஊடாக மீண்டும் பாடசாலையை சென்றடைந்தது. தொடர்ந்து அரங்க நிகழ்வுகள் அங்கு நடைபெற்றன.
தீவக மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங்க் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் கரம்பொன் பங்குத்தந்தை அருட்தந்தை தயாகரன், அருட்சகோதரிகளென பலரும் கலந்துகொண்டனர்.

