தமிழ் இனப்படுகொலை, இனப்பிரச்சினை மற்றும் உள்நாட்டு யுத்தம் தொடர்பாக இரத்தினபுரி மறைமாவட்ட அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் வெளியிட்ட கருத்துகளுக்கு எதிர்வினையாக இலங்கை கத்தோலிக்க தேசிய ஊடக மற்றும் சமூகத் தொடர்பாடல் ஆணைக்குழுவின் இயக்குநர் அருட்தந்தை ஜூட் கிறிஸாந்த வெளியிட்ட அறிக்கை குறித்து யாழ்ப்பாண மறைமாவட்ட குருக்கள் தமது ஆழ்ந்த கவலையையும் ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் அண்மையில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர்கள், தமிழ் மக்கள் பல தசாப்தங்களாக எதிர்கொண்ட அநீதிகள், வன்முறைகள் மற்றும் இடப்பெயர்வுகள் 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் உச்சநிலையை எட்டியதாகக் குறிப்பிட்டு தமிழ் மக்களின் துயரங்கள் மற்றும் போரின் விளைவுகள் தொடர்பான உண்மைகள் நேர்மையாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
அருட்தந்தை விமலசேகரன் வசந்தன் கருத்து தெரிவிக்கையில், அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் வெளியிட்ட கருத்துகள் தனிப்பட்ட அபிப்பிராயங்கள் அல்ல என்றும், போருக்குப் பின்னர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று மக்களுடனும் மதகுருமார்களுடனும் கலந்துரையாடி அவர் பெற்ற அனுபவங்களின் அடிப்படையிலேயே அவை முன்வைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும், போரின் இறுதிக்கட்டத்தில் உயிரிழந்தோர் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக முன்னாள் மன்னார் ஆயர் அமரர் இராயப்பு யோசப் ஆண்டகை சர்வதேச மட்டத்தில் முன்வைத்த விடயங்களையும் அவர் நினைவுகூர்ந்தார்.
அதேவேளை, அருட்தந்தை மங்களராஜா கருத்து தெரிவிக்கையில், யாழ்ப்பாணப் பொதுநூலக எரிப்பு, பல்வேறு பகுதிகளில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழிகள், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான தீர்க்கப்படாத பிரச்சினைகள் மற்றும் போரின் இறுதிக்கட்டத்தில் பொதுமக்கள் எதிர்கொண்ட மனிதாபிமான நெருக்கடிகள் ஆகியவை தொடர்பில் கவலை வெளியிட்டு பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில்கூட பொதுமக்கள் உயிரிழந்தமை மற்றும் அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறை போன்ற விடயங்களும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்களின் அனுபவங்களை மதிப்பதும், உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதும் மட்டுமே இலங்கையில் நிலையான சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்கும் வழிவகுக்கும் என வலியுறுத்திய யாழ்ப்பாண மறைமாவட்ட குருக்கள், தமிழ் மக்களின் துயரங்கள் தொடர்பாக வெளிப்படையாகக் குரல் கொடுத்த அருட்தந்தை ஜீவந்த பீரிஸின் நிலைப்பாட்டையும் பாராட்டியுள்ளனர்.
