தமிழர்களுக்கு எதிராக இலங்கையின் உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் இனப்படுகொலை இடம்பெறவில்லை என்ற நிலைப்பாட்டை இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தமிழ் சட்டத்தரணிகள் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையின் இனப்பிரச்சினையையும் ஆயுத மோதலையும் “பயங்கரவாதத்துக்கு எதிரான போர்” என மட்டும் சித்தரிப்பது வரலாற்று உண்மைகளையும் தமிழ் மக்களின் வாழ்வனுபவங்களையும் புறக்கணிப்பதாகக் குறிப்பிட்டுள்ள பேரவை, 1956ஆம் ஆண்டின் தனிச்சிங்களச் சட்டம், தமிழர்களுக்கு எதிரான இன வன்முறைகள், யாழ்ப்பாணப் பொது நூலக எரிப்பு, கருப்பு ஜூலை இனப்படுகொலை, கல்வி மற்றும் வேலைவாய்ப்புத் துறைகளில் பாகுபாடுகள் உள்ளிட்ட பல நிகழ்வுகள் ஆயுத மோதலுக்கான பின்னணியை உருவாக்கியதாக சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், 2009ஆம் ஆண்டு போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாககூறப்படும் மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் பலமுறை கவலை வெளியிட்டுள்ளதையும் பேரவை நினைவூட்டியுள்ளது.

மன்னார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் அமரர் இராயப்பு யோசேப்பு முன்வைத்த சுமார் 146,000 தமிழ் மக்களின் நிலை குறித்த கேள்விக்கு இதுவரை நம்பகமான பதில் வழங்கப்படவில்லை என்றும், வடக்கு கிழக்கு ஆயர்கள் பேரவை 2022ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் மே 18ஆம் திகதியை “தமிழர் இனப்படுகொலை நினைவு நாள்” என குறிப்பிட்டிருந்ததையும் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.

யாழ்ப்பாண மறைமாவட்ட நீதி மற்றும் சமாதான ஆணைக்குழுவும் யாழ்ப்பாண மறைமாவட்ட குருக்களும் வெளியிட்டுள்ள கருத்துக்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ள தமிழ் சட்டத்தரணிகள் பேரவை, உண்மை, நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் பரஸ்பரப் புரிதலின் அடிப்படையிலேயே நிலையான நல்லிணக்கம் உருவாக முடியும் என வலியுறுத்தியுள்ளது. மேலும், தமிழ் மக்களின் வரலாற்று அனுபவங்களையும் துயரங்களையும் உள்ளடக்கிய சமநிலையான அணுகுமுறையை கத்தோலிக்க ஆயர் பேரவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

By admin