தமிழர் தேசியப் பிரச்சினை, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மற்றும் ஆயுத மோதலின்போது தமிழ் மக்கள் எதிர்கொண்ட துயரங்கள் தொடர்பாக அண்மையில் வெளியான கருத்துகளை தெளிவுபடுத்தி, யாழ்ப்பாண மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
இவ் அறிக்கையில், போரின்போது தமிழ் மக்கள் அனுபவித்த வேதனைகள் தொடர்பாக இரத்தினபுரி மறைமாவட்ட அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் வெளியிட்ட கருத்துகளுக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அவை பாதிக்கப்பட்ட மக்களின் அனுபவங்களை அங்கீகரிக்கும் துணிச்சலான வெளிப்பாடு எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கை மோதலை “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” என வர்ணித்த இலங்கை கத்தோலிக்க தேசிய வெகுஜன ஊடக மற்றும் சமூகத் தொடர்பாடல் ஆணைக்குழுவின் இயக்குநர் அருட்தந்தை ஜீட் கிறிஸாந்த அவர்களின் கருத்துகள் குறித்தும் கவலை வெளியிடப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மற்றும் உள்நாட்டு மோதல் தொடர்பாக இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை தனது உத்தியோகபூர்வ நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ள ஆணைக்குழு, வடக்கு கிழக்கு ஆயர் ஒன்றியம் 2022ஆம் ஆண்டு வெளியிட்ட மே 18 தமிழர் இனப்படுகொலை நினைவேந்தல் நாள் தொடர்பான அறிவிப்பை மீள உறுதிப்படுத்தியுள்ளது.
போரின் விளைவுகள் இன்னும் பல வடிவங்களில் தொடர்வதாக சுட்டிக்காட்டியுள்ள ஆணைக்குழு, பாதிக்கப்பட்ட மக்களின் நினைவுகூரும் உரிமையை மதித்து பாதுகாப்பதுடன், உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை அடிப்படையாகக் கொண்ட நல்லிணக்க முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.



