நீதிக்கும் அமைதிக்குமான வடக்கு-கிழக்கு குருக்கள் துறவியர் அமைப்பு, இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெற்றுவருவது கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை என்பதனை வலியுறுத்தி மே 25 ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
இவ்அறிக்கையில், ஈழத் தமிழர்களின் அரசியல் அபிலாசைகள் பேரம்பேச முடியாதவை என வலியுறுத்தி, தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்றது இனப்படுகொலையெனவும் சிங்களப் பெரும்பான்மை அரசால் தமிழர்கள் வரலாற்று ரீதியாக ஒடுக்கப்பட்டுள்ளரெனவும் தெரிவித்த அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் அவர்களுக்கு தமது முழுமையான ஆதரவினையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
கொழும்பு பேராயத்தின் ஊடக பேச்சாளர் அருட்தந்தை யூட் கிறிஸாந்த வெளியிட்ட அறிக்கையில் தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசு எந்தத் தவறும் செய்யவில்லையெனவும், அரசு பயங்கரவாதத்திற்கு எதிராக மட்டுமே போரிட்டது எனும் கூற்றுக்களை நிராகரித்து அதனை வன்மையாக கண்டித்துள்ளனர்.
ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டம், பல தசாப்தங்களாக கட்டவிழ்த்துவிடப்பட்ட அரசியல், சமூக, பண்பாட்டு ஒடுக்குமுறைகளின் விளைவு எனவும் தெரிவித்து மோதலின் அடிப்படைக் காரணங்களை மறைத்து தமிழர்களையே குற்றம் சாட்டுவது உண்மையை மறுக்கும் செயல் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், தமிழ் கத்தோலிக்க சமூகம் எப்போதும் ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கம் நின்று உண்மை மற்றும் நீதிக்காக குரல் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ள அவர்கள், இலங்கை ஆயர் பேரவையின் சில நிலைப்பாடுகள் நற்செய்தியின் நீதிசார் போதனைகளை விட அரசின் நிலைப்பாட்டை பிரதிபலிப்பதாகவும் கவலை வெளியிட்டுள்ளனர்.
இவ் அறிக்கையில், தமிழர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஒடுக்குமுறைகள், வன்முறைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள், 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் உச்சக்கட்டத்தை எட்டிய வரலாறுசார்ந்த
இனப்படுகொலைச் செயல்முறையின் பகுதிகளாகுமென வலியுறுத்தி, தமிழர் தாயகத்தில் தமிழர்களுக்கு எதிராக கட்டமைக்கப்பட்ட ஒடுக்குமுறைகளும் நில அபகரிப்புகளும் இன்றும் தொடர்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
போரின் இறுதிக்கட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப்பின் இறுதி கடிதத்தையும் நினைவுகூர்ந்துள்ள அவர்கள், உண்மை மற்றும் நீதிக்காக தைரியமாக குரல் கொடுக்க வேண்டியது திருஅவையின் பொறுப்பெனவும் சுட்டிக்காட்டி உண்மையை வெளிக்கொணர்வதே நீதிக்கும் நல்லிணக்கத்திற்கும் அடித்தளமெனவும் நீதியின்றி அமைதி இல்லையெனவும் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், மே 18 ஆம் நாளை “தமிழ் இனப்படுகொலை நினைவு நாள்” என நினைவுகூர வேண்டும் என்ற வடக்கு-கிழக்கு ஆயர்கள் பேரவையின் முன்னைய அழைப்பை மீண்டும் நினைவூட்டியுள்ள அவர்கள், முள்ளிவாய்க்காலில் உச்சத்தை அடைந்த இனப்படுகொலை குறித்த உண்மையை ஏற்றுக்கொள்வதும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்குவதும் இலங்கையில் நிலையான சமாதானத்திற்கான அத்தியாவசிய நிபந்தனைகள் எனவும் தெரிவித்துள்ளனர்.

