தமிழ் இனப்படுகொலை, இனப்பிரச்சினை மற்றும் உள்நாட்டு யுத்தம் தொடர்பாக இரத்தினபுரி மறைமாவட்ட அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் வெளியிட்ட கருத்துக்கு எதிராக, இலங்கை கத்தோலிக்க ஊடக மற்றும் சமூகத் தொடர்பாடல் தேசிய ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை ஜூட் கிறிஸாந்த வெளியிட்ட அறிக்கை குறித்து மனித உரிமை செயற்பாட்டாளர்கள், கிறிஸ்தவ அமைப்புக்கள், கத்தோலிக்க குருக்கள் மற்றும் துறவியர்கள் இணைந்து ஆழ்ந்த கவலையையும் ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அவர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், யுத்தத்தை வெறுமனே “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” என வர்ணிப்பது தமிழ் மக்களின் வரலாற்று அனுபவங்களையும், பல தசாப்தங்களாக அவர்கள் எதிர்கொண்ட ஒடுக்குமுறை, பாகுபாடு, வன்முறை மற்றும் துயரங்களையும் மறைக்கும் முயற்சியாகும் எனக் குறிப்பிட்டு யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டமை,
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை மற்றும் தொடர்ந்து நடைபெறும் நீதிக்கான போராட்டங்கள் என்பவை புறக்கணிக்கப்படக் கூடாதெனவும் வலியுறுத்தியுள்ளனர்.

இவ்வறிக்கையில், 1948ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக தமிழர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுவரும் அரசியல், சமூக மற்றும் இராணுவ ஒடுக்குமுறைகள் கட்டமைக்கப்ட்ட இனப்படுகொலைக்கான வலுவான ஆதாரங்களென சுட்டிக்காட்டி 2015ஆம் ஆண்டு வடமாகாண சபை நிறைவேற்றிய தீர்மானம், வடக்கு கிழக்கு கத்தோலிக்க ஆயர் பேரவையின் 2022ஆம் ஆண்டு அறிக்கை, வடக்கு கிழக்கின் குருக்கள் மற்றும் துறவியர்களின் சமீபத்திய அறிக்கைகள் முள்ளிவாய்க்காலில் உச்சத்தை அடைந்த ஒரு இனப்படுகொலைச் செயல்முறையை வெளிப்படுத்தும் சான்றுகளெனவும்; குறிப்பிட்டுள்ளது.

மேலும், தனிச்சிங்கள சட்டம், கல்வித் தரப்படுத்தல், அரச ஆதரவு சிங்கள குடியேற்றத் திட்டங்கள், தமிழர்களுக்கு எதிரான கலவரங்கள், யாழ். பொதுநூலக எரிப்பு, தமிழ் அரசியல் கைதிகள் படுகொலை, அமைதியான சத்தியாக்கிரகப் போராட்டங்கள் மீதான தாக்குதல்கள் போன்ற நீண்டகால அநீதிகளே தமிழ் இளைஞர்களை ஆயுதப் போராட்டத்திற்கு தள்ளிய அடிப்படை காரணங்களாகுமென இவ்வறிக்கை கோடிட்டுக்காட்டியுள்ளது.

போரின் போது தமிழ் கத்தோலிக்க திருஅவையும் கடுமையாக பாதிக்கப்பட்டதை சுட்டிக்காட்டி இறுதிக்கட்ட யுத்தத்தில் இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்ட அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப், கொல்லப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் குருக்கள், நவாலி, குருநகர், அல்லைப்பிட்டி மற்றும் மன்னார் பேசாலை ஆலயங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் போன்றவை தமிழ் மக்களுக்கு எதிரான பரந்தளவிலான அரச வன்முறையின் எடுத்துக்காட்டுக்களெனவும் குறிப்பிடப்படுள்ளது.

அருட்தந்தை ஜீவந்த பீரிஸின் அறிக்கை, தமிழ் மக்களின் துயரங்களையும் நீதிக்கான கோரிக்கைகளையும் புரிந்துகொள்ளும் மனப்பான்மையுடன் வெளியிடப்பட்ட ஒரு துணிச்சலான ஒற்றுமைக் குரலாகப் பாராட்டப்பட்டுள்ளது. அவர் எதிர்கொள்ளக்கூடிய எந்தவொரு அழுத்தம் அல்லது பழிவாங்கல் நடவடிக்கைகளுக்கும் எதிராக தாங்கள் உறுதியாக நிற்பதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை “தமிழ் இனப்படுகொலை” தொடர்பாக நீதியை அடிப்படையாகக் கொண்ட மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் அனுபவங்களை மதிக்கும் ஒரு தெளிவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய அவசியத்தை சுட்டிக்காட்டி தமிழ் மற்றும் சிங்கள கத்தோலிக்கர்களுக்கிடையில் உண்மை, நீதி, நல்லிணக்கம் மற்றும் நிலையான சமாதானத்தை நோக்கிய உரையாடல்களை முன்னெடுக்க வேண்டுமெனவும் இவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

By admin