கிளிநொச்சி – பூநகரி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கிராஞ்சி, வேரவில், வலைப்பாடு, பொன்னாவெளி, பாலாவி கிராம மக்களுடைய வாழ்வாதாரத்தையும் இயற்கை வளங்களையும் பாதிக்கும் வகையில் அங்கு இடம்பெற்றுவரும் சுண்ணக்கல், கனிய மணல் அகழ்வு மற்றும் காற்றாலை மின் உற்பத்தி அபிவிருத்தி திட்டங்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் வைகாசி மாதம் 28ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.

வேரவில் வைத்தியசாலைக்கு அருகில் ஆரம்பமாகிய இப்போராட்டம் பேரணியாக கிராஞ்சி கற்பக விநாயகர் ஆலயத்தை சென்றடைந்தது.

கிராஞ்சி பகுதியில் மட்டும் சுமார் 8000 தென்னை மரங்களை அழித்து மேற்கொள்ளப்படவுள்ள இக்காற்றாலை மின் உற்பத்தி திட்டங்கள் கண்டிக்கத்தக்கவையெனவும் தென்னைச் செய்கையை நம்பி கிராஞ்சி பகுதியில் வாழும் 2000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் இத்தகைய திட்டங்களை வன்மையாக எதிர்ப்பதாகவும் போராட்டகாரர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் சுண்ணக்கல் மற்றும் கனிய மணல் அகழ்வுகளினால் ஏற்கனவே குடீநீர் பிரச்சினையை எதிர்கொள்ளும் இக்கிராம மக்களுக்கு குடிநீர் இல்லாமல் போகும் துர்ப்பாக்கிய நிலை ஏற்படுமெனவும் மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் இவ்வாறான அபிவிருத்தி செயற்பாடுகள் தேவையில்லையெனவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

இப்போராட்டத்தில் கிராஞ்சி, வேரவில், வலைப்பாடு, பொன்னாவெளி, பாலாவி கிராம மக்கள், மதத் தலைவர்கள், மன்னார் பிரஜைகள் குழு தலைவர் அருட்தந்தை மார்க்கஸ் தலைமையிலான குழுவினர், பொது அமைப்புக்கள், சிவில் அமைப்பு பிரதிநிதிகளென பலரும் கலந்துகொண்டனர்.

By admin