அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை பத்திநாதன் ஜெறோம் லெம்பட் அவர்கள் வைகாசி மாதம் 20ஆம் திகதி கடந்த புதன்கிழமை தனது 76ஆவது வயதில் இறைவனடி சேர்ந்தார்.
மன்னார் பேசாலைப் பங்கைச் சேர்ந்த இவர் 1981ம் ஆண்டு குருவாக திருநிலைப்படுத்தப்பட்டு இலங்கையின் பல பகுதிகளில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக மறையுரைஞராகப் பணியாற்றி, தமிழ் பேசும் கத்தோலிக்க மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றார்.
நகைச்சுவை கலந்த ஆழமான பிரசங்கங்களால் இறைவார்த்தையை ஆழமாக எடுத்துரைத்த இவர், நெடுந்தீவு உள்ளிட்ட பல பங்குகளில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றினார்.
நாட்டின் யுத்த காலத்தில் நெடுந்தீவு பங்கில் பணியாற்றிக்கொண்டிருந்த இவர் உயிராபத்துக்கள் மத்தியிலும் படகுகளின் மூலம் அத்தியாவசிய உணவுப் பொருட்களை எடுத்துச்சென்று, நெடுந்தீவு மக்களின் உணவுப்பற்றாக்குறையை நிவர்த்திசெய்து மதங்களை கடந்து சமூக பணியாற்றியுள்ளார்.
மேலும் தமிழ்மொழி, நாட்டுக்கூத்து மற்றும் கலை நிகழ்ச்சிகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்த அருட்தந்தை அவர்கள் தொண்ணூறுகளில் திருமறைக் கலாமன்றத்தின் கலைப்பணிகளுடன் தன்னை ஈடுபடுத்தி மன்றத்தின் நாட்டுக்கூத்துப்பிரிவின் வளவாளராகவும் பணியாற்றியுள்ளார்.
அன்பு, எளிமை மற்றும் இறைப்பணிக்கான அர்ப்பணிப்பால் நினைவுகூரப்படும் லெம்பட் அடிகளார் இறையமைதியில் இளைப்பாற மன்றாடுவோம்.
